

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் தற்போது பெய்த கனமழையால் 15,169.11 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதிநேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதில், தலைஞாயிறு ஒன்றியம் ஆலங்குடியில் உள்ள மணக்குடி தடுப்பணை, கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் கடுவையாற்றில் உள்ள வெங்காயத் தாமரை அகற்றும் பணிஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர், வேளாங்கண்ணி பூக்காரத் தெரு சுனாமி குடியிருப்பு மற்றும் நாகை புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்ட அவர், மழைநீரை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சர் ரகுபதி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ”நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு, தங்க வைக்க ஏதுவாக 12 புயல் பாதுகாப்பு மையங்கள், 5 பல்நோக்கு பேரிடர் மையங்கள், 145 பள்ளிகள், 22 கல்லூரிகள், 100 சமுதாயக் கூடங்கள், 73 திருமண மண்டபங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஒரு மையத்தில் 90 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் 292 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
தற்போது பெய்துள்ள கனமழை காரணமாக 145.73 ஏக்கர் குறுவை பயிர்கள், 8,515.75 ஏக்கர் சம்பா பயிர்கள், 6,507.63 ஏக்கர் தாளடி பயிர்கள் என மொத்தம் 15,169.11 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கனமழை காரணமாக 51 கூரை வீடுகள் பகுதியாகவும், 2 கூரை வீடுகள் முழுமையாகவும், 2 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதம்அடைந்துள்ளன. 4 பசுக்கள், 6 கன்றுகள், 9 ஆடுகள் உயிரிழந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விளைநிலங்களை சூழ்ந்துள்ள தண்ணீர் வடிந்துவிட்டால் நெற் பயிர்களை காப்பாற்றி விடலாம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, ஆய்வின் போது அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கவுதமன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், எம்எல்ஏக்கள் நாகை மாலி, முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.