Published : 09 Jan 2018 09:25 AM
Last Updated : 09 Jan 2018 09:25 AM

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் தமிழக விவசாயிகளுக்கு ரூ.2,478 கோடி இழப்பீடு: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தகவல்

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் தமிழக விவசாயிகளுக்கு ரூ.2,478 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சட்டப்ரேவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று உரையாற்றும்போது கூறியது:

பழங்கள், காய்கறிகள் போன்ற எளிதில் அழுகக்கூடிய பொருட்களுக்கான விநியோகத் தொடரமைப்பு மேலாண்மைத் திட்டத்தை 10 மாவட்டங்களில் 398 கோடியே 75 லட்சம் செலவில் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் விளைப் பொருட்களை 487 சேகரிப்பு மையங்கள் மூலமாக ஒன்று சேர்த்து, 29 முதன்மைப் பதப்படுத்தும் மையங்கள் மூலமாகப் பதப்படுத்தி, 34 முதன்மைச் சந்தைகள் வாயிலாக விற்பனை செய்யும் வகையில், போக்குவரத்துக் குளிர்பதன வசதிகள் மற்றும் சேமிப்புக் கிடங்கு வசதிகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விநியோகத் தொடரமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

உயர்ந்த இடத்தில் தமிழகம்

பருவ மழையை பெரிதும் நம்பியுள்ள விவசாயத்தின் நிலையற்ற தன்மையை நன்கு உணர்ந்த இந்த அரசு, பருவ நிலையால் ஏற்படும் பேரிழப்பை ஈடுசெய்ய எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக, 2016-17-ம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 15 லட்சத்து 36 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டனர். இந்த மாபெரும் முயற்சியால் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்களுள் தமிழ்நாடு உயர்ந்த இடத்தை அடைந்துள்ளது.

இதன் பலனாக கடந்த ‘ரபி’ பருவத்தில் வறட்சியின் காரணமாக நெல், பயறு வகைகள், சிறு தானியங்கள் உள்ளிட்ட பயிர்களில் ஏற்பட்ட இழப்புக்கு, இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட விவசாயிகளில் 9 லட்சத்து 28 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீடு அனுமதிக்கப்பட்டு இதுவரை ரூ.2,478 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஊரகப் பொருளாதாரத்துக்கு உந்து சக்தியாக கால்நடை பராமரிப்புத் துறை திகழ்வதால் விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி, கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றத்தை இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது.

மேலும், கால்நடை மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x