Published : 16 Nov 2023 04:14 AM
Last Updated : 16 Nov 2023 04:14 AM

திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்காலில் வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால் வயல்களில் வடியாத மழைநீர்

திருவாரூர் / மயிலாடுதுறை / காரைக்கால்: திருவாரூர் மாவட்டத்தில் நவ.10-ம் தேதிக்கு முன்பு பரவலாக ஆங்காங்கே மழை பெய்திருந்தாலும், 13-ம் தேதி தொடங்கி நேற்று வரை தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சம்பா சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

முறையாக தூர் வாரப்படாத அல்லது சீரமைக்கப்படாத வாய்க்கால்களிலும் மழைநீர் தேங்கியுள்ளதால், வயல்களில் இருந்து வாய்க்கால்களுக்கு மழைநீர் வடியாத சூழல் உள்ளது. தற்போது, வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனினும், தொடர்ந்து மழை நீடிக்கும்போது, வடிகால்களில் மழைநீர் வடியாமல் இருந்தால் பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, மழை தீவிரம் அடைவதற்குள் வடிகால்களை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில்...: மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் நவ.13-ம் தேதி இரவு தொடங்கி நேற்று முன்தினம் மாலை வரை கனமழை பெய்தது. அதன் பிறகு தரங்கம்பாடி, பொறையாறு, திருக்கடையூர், சங்கரன் பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 10 மணி வரை விட்டு விட்டு கனமழை பெய்தது. மற்ற பகுதிகளில் லேசான மழைபெய்தது.

காழியப்பநல்லூர், அனந்த மங்கலம், அகர கீரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 6 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்களை சூழ்ந்துள்ள மழைநீர் வடியாமல் உள்ளது. அகர கீரங்குடி ஊராட்சி முட்டம் பகுதியில் 3 ஆண்டுகளாக வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மழை நீடித்தால் பயிர்கள் சேதம் அடையும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாததால், 3,000-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள், 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ள பாதிப்புகள் குறித்த தகவல்களை 1077, 04364-222588 ஆகிய தொலைபேசி எண்களிலும், 70922 55255 என்ற வாட்ஸ் - அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): மயிலாடுதுறை 56, செம்பனார்கோவில் 69.4, மணல்மேடு 29, சீர்காழி 63, கொள்ளிடம் 54.8, பொறையாறு 55.1.

காரைக்கால் மாவட்டத்தில்...: காரைக்கால் மாவட்டம் முழுவதும் நவ.13-ம் தேதி இரவு தொடங்கி நேற்று முன்தினம் மதியம் வரை கனமழை பெய்தது. அதன் பிறகு, அன்று இரவு முதல் நேற்று மாலை வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக, தாழ்வான இடங்கள், குடியிருப்பு பகுதிகள், சம்பா பயிரிடப்பட்டிருந்த வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்கரை கிராமப் பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளை நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா பார்வையிட்டார். காரைக்காலில் நேற்று காலை 8.30 மணியுடன் 105.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

திருநள்ளாறு பகுதியில் உள்ளசில வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால், வயலில் மழைநீர் புகுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,காரைக்கால் கடைமடை விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் டி.என்.சுரேஷ் தலைமையில் விவசாயிகள் சிலர் நேற்று திருநள்ளாறு பகுதியில் உள்ள வாய்க்காலில் இறங்கி, முழக்கங்களை எழுப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x