Published : 07 Jan 2018 11:24 AM
Last Updated : 07 Jan 2018 11:24 AM

டீசல் வரி, சுங்க கட்டணத்தில் விலக்கு அளித்தால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.2,000 கோடி செலவு குறையும்: வல்லுநர்கள் யோசனை

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் வரி மற்றும் சுங்க கட்டணத்தில் விலக்கு அளித்தாலே, ஆண்டுக்கு ரூ.2,000 கோடி செலவை குறைக்க முடியும் என போக்குவரத்து துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் தினமும் இயக்கப்படும் 23 ஆயிரத்து 400 அரசு பேருந்துகளில் 2.4 கோடி பேர் பயணம் செய்கின்றனர். இத்துறையின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் கோடியாக உள்ளது. அதே நேரத்தில் அடிக்கடி உயர்த்தப்படும் டீசலின் விலை, உதிரி பாகங்களின் விலை உயர்வு உள்ளிட்ட செலவுகளால் இந்த துறை யின் மொத்த கடன் சுமை ரூ.30 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.

இந்த கடன் சுமையில் இருந்து போக்குவரத்து துறையை மீட்பது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகங்களின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அரசு போக்குவரத்து கழகங்களின் கடன் சுமை என்பது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே படிப்படியாக உயரத் தொடங்கி விட்டது. செலவுகள் அதிகரித்த போதிலும், வருவாயைப் பெருக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்காததே இதற்கு முக்கிய காரணம். போக்குவரத்து கழகங்கள் நன்றாக செயல்பட வேண்டுமானால், பஸ் கட்டணத்தை உயர்த்தாவிட்டாலும், பஸ்களை முறையாக பராமரித்து குறித்த நேரத்தில் இயக்க வேண்டும். உதிரி பாகங்களில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்.

தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும். குறிப்பாக, போக்குவரத்து கழகங்களுக்கு எதற்கு 10 நிர்வாக இயக்குநர்கள், 80 பொதுமேலாளர்கள், 120 துணை மேலாளர்கள்? மொத்த வருவாயில் 44 சதவீதத்தை சம்பளத்துக்கே ஒதுக்கிவிட்டால், அந்தத் துறை எப் படி வளர்ச்சி பெறும்? டீசல் வரி, சுங்க கட்டணம் ஆகியவற்றுக்கு விலக்கு அளித்தாலே போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 கோடி செலவைக் குறைக்க முடியும் என்று கூறினர்.

இதுதொடர்பாக ஏஐடியுசி பொதுச்செயலாளர் ஜெ.லட்சுமணன் கூறும்போது, “அரசு போக்குவரத்து துறையில் தொழிலாளர் களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க தனியாக டிரஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூ திய பலன்கள், பணிக்கொடை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். ஆனால், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் டிரஸ்ட்டில் போதிய நிதி இல்லை என போக்குவரத்து நிர்வாகம் தரப்பில் கூறுகின்றனர்.

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்குப் பிறகு தான் பி.எப்.க்கான காசோலை கிடைக்கிறது. மேலும், ஒட்டுமொத்த ஓய்வூதிய பலன்களைப் பெற சுமார் 5 ஆண்டுகள்கூட ஆகிவிடுகிறது. எனவே, தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மற்ற துறைகளில் இருப்பதை போல், போக்குவரத்து துறையின் ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். இதனால், போக்குவரத்து கழகங்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ரூ.80 கோடி செலவைக் குறைக்க முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x