

சென்னை: ஆவடியில் விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என கடந்த 20 ஆண்டு காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்னையை அடுத்த ஆவடி தொகுதியில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு மத்திய அரசின் தளவாட தொழிற்சாலைகள், மத்திய ரிசர்வ் காவல் படை, விமானப் படை மற்றம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் பயிற்சி மையங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோனோர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவை தவிர, ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும், தற்போது ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, ஆவடி கேரள சமாஜத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ணன் உன்னி கூறியதாவது: ஆவடி ஒரு குட்டி பாரத விலாஸ் ஆவடியில் உள்ள பாதுகாப்புத் தளவாட தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஆகிய பயிற்சி மையங்களில் பயிற்சிபெறும் வீரர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதில், பலர் ஆவடியில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதனால், ஆவடி ஒரு குட்டி பாரத விலாஸ் ஆக திகழ்கிறது. இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சென்று ரயில் ஏற வேண்டி உள்ளது.
அதேபோல், ஊரில் இருந்து திரும்பி வருபவர்களும் அரக்கோணத்தில் இறங்க வேண்டும். அல்லது பெரம்பூர், சென்னை சென்ட்ரலுக்குச் சென்று இறங்க வேண்டும். இதனால், கால விரயம் ஏற்படுகிறது. அத்துடன், ஊரில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்களுக்கு ஆவடியில் நிறுத்தம் வழங்க வேண்டும் என நாங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். இதன் விளைவாக, தற்போது திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல், ஆலப்புழை - சென்னை சென்ட்ரல், மங்களூரூ - சென்னை சென்ட்ரல், திருப்பதி - சென்னை சென்ட்ரல் கருடாத்ரி ஆகிய விரைவு ரயில்களுக்கு மட்டும் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில், சென்னை சென்ட்ரல்-மங்களூரு விரைவு ரயில் இருமார்க்கத்திலும் நின்று செல்கிறது.
அதேசமயம், ஆவடி வழியாக கோவைக்கு இயக்கப்படும் கோவை விரைவு ரயில், கோவை இன்டர்சிட்டி, பெங்களூருக்கு இயக்கப்படும் பிருந்தாவன், லால்பாக், சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூக்கு இயக்கப்படும் மங்களூர் மெயில், வெஸ்ட்கோஸ்ட், திருவனந்தபுரம் மெயில், பழனி வழியாக இயக்கப்படும் பாலக்காடு விரைவு ரயில், மும்பை மெயில் உள்ளிட்ட ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும். போர் தளவாட தொழிற்சாலைகளின் மைய கேந்திரமாக ஆவடி திகழ்வதால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆவடியில் அனைத்து விரைவு ரயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதே கோரிக்கை குறித்து, திருமுல்லைவாயலை சேர்ந்த ஆர்.ஜெயசுதா கூறும்போது, நாங்கள் அடிக்கடி வெளியூருக்கு குடும்பத்துடன் சென்று வருகிறோம். அவ்வாறு செல்லும்போது சென்னை சென்ட்ரலுக்கும், திரும்பி வரும்போது அரக்கோணத்தில் அல்லது சென்னை சென்ட்ரலுக்கு சென்று விட்டு மீண்டும் ஆவடிக்கு வர வேண்டி உள்ளது. இதனால், கால விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது. எனவே, விரைவு ரயில்கள் ஆவடியில் நின்று சென்றால் ஏராளமானோர் பயன் அடைவார்கள் என்றார்.
ஆய்வுக்கு பிறகு முடிவு: இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆவடியில் தற்போது 4 விரைவு ரயில்கள் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணச்சீட்டு விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய், கூடுதல் ரயில்களை நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பிறகு ரயில்களுக்கு நிறுத்தம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.