Published : 15 Nov 2023 05:11 AM
Last Updated : 15 Nov 2023 05:11 AM

கூர்நோக்கு இல்லங்களின் மேம்பாடு தொடர்பான 500 பக்க அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு: மனநல ஆலோசகரை நியமிக்க நீதிபதி சந்துரு குழு பரிந்துரை

சென்னை: கூர்நோக்கு இல்லங்கள் தொடர்பான 500 பக்க அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி சந்துரு குழு அளித்தது. இத்தகைய இல்லங்களை குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தனி இயக்குநரகத்தின்கீழ் கொண்டுவர வேண்டும். அனைத்து கூர்நோக்கு இல்லங்களிலும் முழுநேர மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 டிசம்பரில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பேட்டரி ரிலே பாக்ஸை திருடியதாக மேற்கு தாம்பரம் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த சிறுவனை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். அங்கிருந்த காவலர்கள் தாக்கியதில் கடந்த டிச.31-ம் தேதி அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் சிறுவர் சீர்திருத்த பள்ளி காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிகள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்களின் செயல்பாடுகள், நிர்வாக திறன்களை மேம்படுத்தும் நோக்கில், முன்னாள் நீதிபதி தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஒரு பிரதிநிதி ஆகியோர் அதில் இடம்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து அரசு கடந்த ஏப்.11-ம் தேதி உத்தரவிட்டது.

கடந்த மே 2-ம் தேதி பொறுப்பேற்ற இக்குழு, இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்களில் நேரடியாக ஆய்வு செய்தது.

இவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 500 பக்க அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் இக்குழு நேற்று சமர்ப்பித்தது. அப்போது, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சமூகநலத் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, துறை ஆணையர் வே.அமுதவல்லி, நீதிபதி சந்துருவின் மகள் சக்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

பல்வேறு பரிந்துரைகள்: அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளை நீதிபதி சந்துரு வழங்கியுள்ளார். அதன் விவரம்:

சிறுவர் சீர்திருத்த பள்ளிகள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்களுக்கான புதிய விதிகளை உருவாக்கி, கடந்த 2021-ல் சட்டத் திருத்தம் கொண்டுவந்து, 2022-ல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இந்த விதிகளை அமல்படுத்த வேண்டும். இல்லங்களை பதிவு செய்தல், அங்கீகரித்தல் குறித்த விதிகளை மறுஆய்வு செய்து, உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும்.

சமூக பாதுகாப்பு இயக்குநரகம் பிரிக்கப்பட்டு, கூர்நோக்கு இல்லங்களை குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தனி இயக்குநரகத்தின்கீழ் கொண்டுவர வேண்டும். இதற்காக இயக்குநர் தலைமையில் புதிதாக சிறப்பு சேவைகள் துறையை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும்.

மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் ஓர் இல்லமாவது இருக்க வேண்டும். இல்லங்களை தினமும் கண்காணிக்க வேண்டும். அனைத்து கூர்நோக்கு இல்லங்களிலும் முழுநேர மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும்.

இல்லங்கள் சிறைபோல இருக்க கூடாது. அவற்றின் அமைப்பு மாற்றப்பட்டு புதிய கட்டிடவியல் தன்மையுடன் அமைக்க வேண்டும். இல்லங்களில் சிறுவர்கள் 24 மணிநேரமும் அடைத்து வைக்கப்பட கூடாது. சிறுவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க வேண்டும். தூங்குவதற்கு மெத்தை, தலையணையுடன் கட்டில் வழங்க வேண்டும். நவீன கழிப்பறைகள், துணி துவைக்க இயந்திரம், கொசு விரட்டி உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும். 13-16 வயதினரை ஒரு குழுவாக, அதற்கு மேல் உள்ளவர்களை ஒரு குழுவாக அடைக்க வேண்டும்.

இல்லங்களில் உள்ள மாஸ்டர்கள் தகுதியான ஆசிரியர்களாக இருக்க வேண்டும். இல்லங்களில் கண்காணிப்பாளர்கள் தவிர, உதவி கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு, அவர்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டும். சமையலர்கள், துப்புரவு பணியாளர்களை காலநிலை ஊதியத்தில் நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பரிந்துரை செய்துள்ளார்.

சந்துருவுக்கு முதல்வர் நன்றி: இதனிடையே அறிக்கை பெற்றது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டையும் நிர்வாகத்திறனையும் மேம்படுத்த, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவின் அறிக்கையை குழந்தைகள் நாளில் பெற்றுக் கொண்டேன்.

சமூக நலத்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து, அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மதிப்பூதியம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல் குழந்தைகள் நலனுக்காக இப்பணியை ஏற்றுக் கொண்டு அறிக்கை அளித்த நீதிபதி சந்துருவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை பதிவு செய்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x