Published : 15 Nov 2023 06:01 AM
Last Updated : 15 Nov 2023 06:01 AM
மதுரை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் உள்ளிட்ட இருவர் தங்களை விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பாக ராபர்ட் பயஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் 11.11.2022-ல் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டேன். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளில்இருந்து கொட்டப்பட்டு இலங்கைஅகதிகள் முகாமில் தங்கியுள்ளேன்.
இந்த முகாம் சிறையைவிட மோசமானது. அறையை விட்டு வெளியே வரவும், மற்றவர்களுடன் பழகவும் அனுமதிப்பதில்லை. சிறையிலிருந்து விடுதலையான பிறகும் அதே நிலை தொடர்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள் ளேன்.
முகாமில் இருந்து விடுதலை செய்யக் கோரி முகாம் அதிகாரிகளிடம் கேட்டபோது இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர். என்னை இலங்கைக்கு அனுப்புவது மரண தண்டனைக்கு ஈடானது.இலங்கைக்கு நாங்கள் சென்றால்கண்டிப்பாக கொலை செய்யப்படுவோம்.
எனவே, நான் இலங்கை செல்லவிரும்பவில்லை. என் மனைவி, மகன், சகோதரி ஆகியோர் நெதர்லாந்தில் வசித்து வருகின்றனர். என்னை முகாமிலிருந்து விடுவித்தால் எஞ்சியிருக்கும் வாழ்நாளை நெதர்லாந்தில் உள்ள என் குடும்பத்தினருடன் கழிப்பேன்.
இதனால் என்னை கொட்டப்பட்டு முகாமிலிருந்து விடுவித்து, நெதர்லாந்து அல்லது வேறு நாட்டுக்குச் செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
அதேபோல, ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில், தன்னை முகாமிலிருந்து விடுதலை செய்துசென்னையில் உள்ள தனது குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT