Published : 15 Nov 2023 06:04 AM
Last Updated : 15 Nov 2023 06:04 AM
பல்லாவரம்: அனகாபுத்தூரில், டோபிகானா, தாய் மூகாம்பிகை, சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து 700 குடியிருப்புகள் கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீபாவளிக்கு முன் தொடங்கியது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், அடையாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள பகுதியில் 3 முறை அளவீடு செய்து கல் நடப்பட்டுள்ளது. அதனால் மறு அளவீடு செய்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவை பல்லாவரம் எம்எல் ஏ இ. கருணாநிதி அண்மையில் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில், ‘பல்லாவரம் தொகுதி அனகாபுத்தூரில், அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில், முன்னாள் தலைமை செயலர் இறையன்பு 1988-ல் காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்தபோது பொதுப்பணி மற்றும் வருவாய் துறையினர் மூலம் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் கல் பதித்து நில அளவீடு செய்தனர். அதன்பின்னர் 2015-ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியின்போது, அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, குடியிருப்பு பகுதி போக மீதமுள்ள பகுதிகளில் கல் பதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தாண்டு மீண்டும் ஆற்றில் வெள்ள பெருக்குக்கும், குடியிருப்புக்கும் சம்பந்தமில்லாத பகுதியில் உள்ள வீடுகளை அப்புறப்படுத்தும் வகையில் புதியதாக கல் புதைத்து நில அளவீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் அடையாறு ஆற்றை ஒட்டி மீண்டும் மறு நில அளவீடு செய்து, மக்கள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT