

வத்தலகுண்டு: அய்யம்பாளையம் அருகே மருதாநதி அணையில் இருந்து வடக்கு வாய்க்கால் பகுதிக்கு பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகேயுள்ள மருதா நதி அணையின் மொத்த உயரம் 74 அடி. தற்போது அணையில் 72 அடி நீர் தேக்கப் பட்டுள்ளது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மருதா நதி அணைக்கு விநாடிக்கு 85 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் பாதுகாப்புக் கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சித்தூர், கதிர்நாயக்கன் பட்டி, நெல்லூர், அய்யம்பாளையம் உள்ளிட்ட வடக்கு வாய்க்கால் பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வெளியேற்றப்படும் உபரிநீரில் 20 கன அடி தண்ணீர் வடக்கு வாய்க்காலில் திறந்து விடப்பட்டுள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு வடக்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது மீண்டும் இந்த ஆண்டு வடக்கு வாய்க் காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் அப்பகுதி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசனவசதி பெறும்.
இது குறித்து சித்தரேவு ஊராட்சி முன்னாள் தலைவர் பால சுப்பிரமணியன் கூறுகையில், `கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு வாய்க்கால் பெரும்பகுதி சீரமைக்கப்பட்டது. தற்போதும் சில இடங்களில் சீரமைக்க வேண்டி உள்ளது. கடந்த ஆண்டுபோல் இந்த ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது', என்றார்.