Published : 14 Nov 2023 06:32 AM
Last Updated : 14 Nov 2023 06:32 AM
சென்னை: கரோனா ஆராய்ச்சிக்காக தேசிய சித்த மருத்துவ கல்வி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.50 லட்சத்தை முறைகேடு செய்துவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 12 வாரங்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சித்த மருத்துவரான எஸ்.விஷ்வேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ரூ.50 லட்சம் ஒதுக்கீடு: மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் கரோனா தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள கடந்த 2020-ம் ஆண்டு ரூ.50 லட்சத்தை சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ கல்வி நிறுவனத்துக்கு ஒதுக்கியது.
இந்த நிதியை நிறுவனத்தின் இயக்குநராக உள்ள மருத்துவர் ஆர்.மீனாகுமாரி மற்றும்மருத்துவர்கள் எம்.மீனாட்சி சுந்தரம், ஜி.ஜெ.கிறிஸ்டியன், பி.சண்முகப்பிரியா, ஏ.மாரியப்பன், வி.சுபா ஆகியோர் கூட்டு சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த 2022 அக்.6-ல் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.
சட்டப்படி நடவடிக்கை: இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.கான்ஷியஸ் இளங்கோ ஆஜராகி வாதிட்டார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.குமரகுரு, மனுதாரின் புகார் தொடர்பாக 12 வாரங்களுக்குள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக மத்திய அரசு விரிவான விசாரணை நடத்தி 12 வாரங்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT