உலகம் முழுவதும் நடந்த தமிழ் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்க தரவகம் தொடங்கப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

உலகம் முழுவதும் நடந்த தமிழ் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்க தரவகம் தொடங்கப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
Updated on
1 min read

உலகம் முழுவதும் இதுவரை நடைபெற்றுள்ள தமிழ் சார்ந்த ஆராய்ச்சிகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு மாதத்துக்குள் ஆராய்ச்சி தரவகம் (Research Portal) தொடங்கப்படும் என அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் தமிழ்த்தாய் 70 - தமிழாய்வுப் பெருவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது:

ஹார்வர்டு பல்கலைக்கழகத் தில் தமிழ் இருக்கை அமைக்க இன்னும் ரூ.1.80 கோடி நிதி தேவைப்படுகிறது. இதற்கு நிதி அளிக்க விரும்புவோர் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் மூலமாக அளிக்கலாம். இதற்காக உலக தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு வரி விலக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் நன்கொடையாளர் கள் அளிக்கும் தொகை முழுமையாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் சென்றடையும். நிதி அளிப்போர் Account IITS- Harvard Tamil Chair என்ற பெயரில், காசோலையாகவோ, வரைவோலையாகவோ அனுப்பி வைக்கலாம். ரூ.100 முதல் ரூ.1 கோடி வரை விருப்பம் போல பணம் அளிக்கலாம்.

உலகில் தமிழ் சார்ந்த ஆராய்ச்சிகள் எங்கு நிகழ்ந்திருந்தாலும் அதை ஆராய்ச்சியாளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆராய்ச்சி தரவகம் (ResearchPortal) உருவாக்கப்பட உள்ளது. இதற்கு முன்பு தமிழ் சார்ந்து யார் என்ன தலைப்பில் ஆராய்ச்சி செய்துள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லை. அந்த குறையைப் போக்க இந்த ஆராய்ச்சி தரவகம் உதவும். ஒரு மாதத்தில் முதல்வர் இதை தொடங்கிவைக்க உள்ளார்.

தற்போது தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மட்டும் சுமார் 350 பேர் ஆராய்ச்சி மாணவர்களாக பதிவு செய்து உள்ளனர். இதுவரை சுமார் 1,000 பேர் ஆராய்ச்சிகளை நிறைவு செய்துள்ளனர். அதேபோல செம் மொழி தமிழாய்வு நிறுவனம், 42 பல்கலைக்கழகங்களில் தமிழ் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். சில இடங்களில் ஏற்கெனவே செய்த ஆய்வையே மீண்டும் மேற்கொள்கின்றனர். அது தரமானதாக இருக்காது. பழைய ஆராய்ச்சியில் இருந்து சில பகுதிகளை அப்படியே மீண்டும் எடுத்துக்கொள்கின்றனர். இந்த குறைபாடுகளையும் தரவகம் மூலம் போக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in