Published : 14 Nov 2023 06:15 AM
Last Updated : 14 Nov 2023 06:15 AM
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 180 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தீபாவளிபண்டிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, வீடுகளுக்கு முன் தெருக்களில் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சென்னையைப் பொறுத்தவரை 15 மண்டலங்களில் 35 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இவற்றில் வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் நேற்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மண்டலத்துக்கு 2 வாகனங்கள் என 30 வாகனங்கள் தூய்மைப் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மயிலாப்பூர் மயானத்தில் ஆய்வு: இந்நிலையில், சென்னையை அடுத்த அக்கரை பகுதியில் பட்டாசுகுப்பையை அகற்றும் பணியைமாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். தொடர்ந்து மயிலாப்பூர் மயான பூமியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கழிவுகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றும் பணியையும் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தீபாவளியையொட்டி சென்னை மாநகரில் வெடிக்கப்படும் பட்டாசு கழிவுகளை அகற்ற மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நவ.11 முதல் 13-ம் தேதிவரைபட்டாசுக் கழிவுகளை விரைந்து சேகரிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டு 19,063 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுவரை சென்னையில் 11-ம் தேதி 3.67 மெட்ரிக் டன், 12-ம் தேதி 53.79 மெட்ரிக் டன், 13-ம் தேதி 152.28மெட்ரிக் டன் என கடந்த 3 நாட்களில் மொத்தமாக 210 மெட்ரிக்டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 275 மெ.டன்: கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 5 நாட்களில் 275மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தீபாவளிபண்டிகையில் சேகரிக்கப்படும் கழிவுகள் மிகவும் அபாயகரமானவை. எனவே இந்த பட்டாசுகள்கழிவுகள் தனித்தனியாக பாதுகாப்பான முறையில் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் முதல்கட்டமாக 54 மெட்ரிக் டன் கழிவுகள் கும்மிடிபூண்டியில் உள்ள கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்கு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராயபுரம், தண்டையார்பேட்டை, அண்ணாநகர், அடையாறு போன்ற விரிவாக்க பகுதிகளில் அதிகளவு பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டன. அடுக்குமாடி குடியிருப்புகளில் தீ விபத்து ஏற்படாத வண்ணம் ஒத்துழைப்பு தந்த பொதுமக்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT