Published : 04 Jan 2018 10:20 AM
Last Updated : 04 Jan 2018 10:20 AM

விபத்து மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட 850 பேருக்கு மாற்றுப் பணி தராமல் மாநகர போக்குவரத்து கழகம் இழுத்தடிப்பு: வருமானம் இன்றி தவிப்பதாக கவலை

பல்வேறு விபத்து மற்றும் உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வரும் 850 பேருக்கு 6 மாதங்களாக மாற்றுப்பணி வழங்காமல் மாநகர போக்குவரத்து கழகம் இழுத்தடிப்பதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் போதிய வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

கடந்த 6 மாதங்களாக...

தமிழக அரசுப் போக்கு வரத்துத் துறையின்கீழ் செயல்படும் 8 போக்குவரத்துக் கழகங்களில் 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மட்டுமே ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப அலுவலர் என மொத்தம் 24,223 பேர் பணியாற்றுகின்றனர். பணியின்போது, அவ்வப்போது ஏற்படும் பல்வேறு விபத்துகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கு உரிய மருத்துவ சான்றிதழ் சமர்பித்த பிறகு, சம்பந்தப்பட்ட ஊழியர் களுக்கு போக்குவரத்து அலுவலங்களில் மாற்றுப்பணி வழங்கு வது வழக்கமாக ஒன்றாக இருக்கிறது. ஆனால், கடந்த 6 மாதங்களாக இந்த பணி வழங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 850 ஊழியர்கள் மாற்றுப்பணி கிடைக்காமல் பாதிக்கப் பட்டுள்ளனர்.

6 மாதங்களுக்கு முன்பு ...

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

‘‘அரசுப் போக்குவரத்து துறையில் பணி பாதுகாப்பு கருத்தில் கொண்டே குறைந்த சம்பளமாக இருந்தாலும், நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

இதற்கிடையே விபத்துகளில் கை, கால் முறிவு, இருதய நோய், கண்பார்வை பாதிப்பு உட்பட பல்வேறு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டுமென கோரி நிர்வாகத்திடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தோம். ஓராண்டுக்குப் பிறகும் நிர்வாகம் இதுவரையில் மாற்றுப்பணி வழங்கவில்லை.

தொடர்ந்து புறக்கணிப்பு

கடந்த 6 மாதங்களில் மட்டுமே 850 பேர் காத்திருக்கின்றனர். ஆனால், ஆளும்கட்சிக்கு ஆதர வாக இருப்போருக்கும், பல ஆயிரம் கணக்கில் பணம் கொடுப்போருக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து மாற்றுப்பணி வழங்கப்படுகிறது. எங்களைப் போன்ற நடுநிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம்.

தற்போது எந்த பணியும் வழங்காமல் இருக்கிறது. எங்களுக்கு வேறு ஆதாரமும் இல்லாததால், குடும்ப செலவுக்கு பணமும் இல்லாமல் அவதிப்படுகிறாம். எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களுக்கு மாற்றுப் பணிவழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

இவ்வாறு அவர்கள் கூறினார் கள்.

இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மாற்றுப்பணி கேட்டு ஊழியர்கள் மனு அளித்துள்ளது உண்மைதான். தொடர்ந்து, அவர்களின் கோரிக்கைகள் பரிசீலித்து படிப்படியாக வாய்ப்புள்ள இடங்களில் மாற்றுப் பணிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x