Published : 06 Jan 2018 09:16 AM
Last Updated : 06 Jan 2018 09:16 AM

தமிழகம் முழுவதும் அரசு பேருந்து சேவை முடங்கியது: குறைந்த பஸ்களே ஓடியதால் மக்கள் கடும் அவதி; ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் நேற்று 2-வது நாளாக அரசு பஸ் சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் மிகக் குறைந்த அளவிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 20 சுற்றுகளாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் இறுதியாக சென்னை குரோம்பேட்டையில் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் 2.57 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், 2.44 சதவீத உயர்வு மட்டுமே வழங்க அரசு முன்வந்தது. இதனால் பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டதாக தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உட்பட 16 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன.

அதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பஸ்களின் இயக்கத்தை நிறுத்தி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். இதனால் நேற்று முன்தினம் மாலையில் இருந்து அரசு பஸ் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

30 சதவீதத்துக்கும் குறைவு

மாநிலம் முழுவதும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் சுமார் 23,500 அரசு பஸ்கள் உள்ளன. அவற்றில் 30 சதவீதத்துக்கும் குறைவான பஸ்களே நேற்று இயக்கப்பட்டன. அதிமுக சார்பு தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கப் பேரவை உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் தனியார் தொழிலாளர்களைக் கொண்டு குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டன. தினக்கூலி அடிப்படையில் அரசு பஸ்களை இயக்க ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக சென்னை கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி சுமார் 2,000 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. ஆனால் நேற்றைய போராட்டத்தின்போது சுமார் 25 சதவீத பஸ்களே இயக்கப்பட்டதால் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் பாதிப்படைந்தனர்.

அதேபோல் சென்னை மாநகரிலும் சுமார் 30 சதவீதத்துக்கும் குறைவான மாநகர பஸ்களே இயங்கின. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர், தினசரி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் உரிய இடத்துக்கு உரிய நேரத்துக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். பெரும்பாலானோர் ஆட்டோக்களில் பயணம் செய்தனர். எனினும் ஆட்டோக்களிலும் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மக்களின் பாதிப்பு அதிகமானது.

விழுப்புரம் மாவட்டத்தில் 197 அரசு பஸ்கள் மட்டுமே இயங்கின. அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால், கிராமப்புறங்களுக்குப் போது மான பஸ்கள் இயக்கப்படவில்லை. கடலூர் மண்டலத்தில் பணியாற்றும் 4200 தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 90 சதவீத அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. சென்னை, ஓசூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. 3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மாலைக்குப் பிறகு தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உதவியுடன் 65 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன.

கும்பகோணம் மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 25 சதவீத அரசுப் பேருந்துகளே இயக்கப்பட்டன. அதிக அளவில் தனியார் பேருந்துகள், மினி பேருந்துகளே காணப்பட்டன. தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் பயணிகள் புகார் தெரிவித்தனர். மதுரை மண்டலத்தில் 15 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. மதுரை நெடுஞ்சாலை அருகேவுள்ள பணிமனையில் இருந்து பேருந்துகளை வெளியே எடுக்கவிடாமல் தொழிலாளர்கள் கேட்டைப் பூட்டித் தடுத்தனர். இதில் போலீஸாருக்கும், தொழிலாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. லேசான தடியடி நடத்தி கலைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் தனியார் பேருந்துகளும், சிற்றுந்துகள், ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்பட்டன. இதனால், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. ராமேஸ்வரத்தில் வெளிமாநில பக்தர்கள் உள்ளிட்ட பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நகர பேருந்துகள் இயக்கப்பட்டன. ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. தனியார் வழக்கமாக இயக்கும் பேருந்துகளுடன், மாற்றுப் பேருந்துகளையும் இயக்கினர். கொடைக்கானலுக்கு அரசு பஸ்கள் செல்லாததால் சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலுமாக இல்லை. பழநியில் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்ட போதிலும் குறைவான எண்ணிக்கையிலேயே பக்தர்கள் வருகை இருந்தது. தேனி மாவட்டத்தில் குறைவாக அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதால் சபரிமலை சென்றிருந்த ஐயப்ப பக்தர்கள் தமிழகத்துக்கு மீண்டும் திரும்பி வரமுடியாமல் குமுளி பஸ் நிலையத்தில் தவித்தனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. சங்கரன்கோவிலில் பணிமனையிலிருந்து அ.தொ.பேரவையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கச் சென்றபோது மற்ற தொழிற்சங்கத்தினர் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. கோவை மாவட்டத்தில் சுமார் 25 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயங்கின. தனியார் பேருந்துகள், கால்டாக்சி, ஆட்டோக்கள் முழு அளவில் இயங்கியபோதும், அதிக கட்டணம் வசூலித்ததாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த தமிழக அரசின் 135 பஸ்கள் இயங்கவில்லை.

இதற்கிடையே பஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அனைத்து தொழிலாளர்களும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. எனினும், தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x