Published : 25 Jan 2018 09:29 AM
Last Updated : 25 Jan 2018 09:29 AM

1984-ம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் முதல்வர் பழனிசாமியிடம் ஒப்படைப்பு: முன்னாள் அமைச்சர் ஹண்டே வழங்கினார்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அடங்கிய கோப்புகளை, முதல்வர் கே.பழனிசாமியிடம் முன்னாள் அமைச்சர் ஹண்டே நேற்று வழங்கினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஹெச்.வி.ஹண்டே நேற்று தலைமைச் செயலகம் வந்து முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்தார். அப்போது, கடந்த 1984-ம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் எம்ஜிஆர் சிகிச்சை பெற்றபோது, மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை தொடர்பாக அளித்த கோப்புகளை முதல்வரிடம் வழங்கினார்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் ஹண்டே கூறியதாவது: எம்ஜிஆர் உடல் நலம் குறைவாக இருந்த நேரத்தில் அவரை அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனைக்கு அழைத்துப் போக வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சரியாக ஒரு மாதத்துக்குப்பின் நவ.5-ம் தேதி விமானத்தில் செல்ல ஏற்பாடுகள் செய்து, நாங்கள் அவரை புரூக்ளின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

அப்போது ஒரு மாதம் அப்போலோவில் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற கோப்பு, எங்களுடன் கொண்டுவரப்பட்டது. அது புரூக்ளின் மருத்துவமனையில் இருந்தது. ஒரு மாதத்துக்குப்பின் நான் மீண்டும் சென்னை வரவேண்டியிருந்தது. எம்ஜிஆர் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய, அவரது கைரேகையை பதிவு செய்து எடுத்து வந்தேன். அப்போது அப்போலோ சிகிச்சை தொடர்பான கோப்புகளை என்னிடம் புரூக்ளின் மருத்துவமனை நிர்வாகிகள் கொடுத்தனுப்பினர்.

அதன்பின், எம்ஜிஆர் 3-வது முறையாக முதல்வரானபின், நான் அவரிடம் இந்த கோப்புகளை கொடுத்தேன். ஆனால் அவர், ‘உன்னிடமே பத்திரமாக இருக்கட்டும்’ என்று கொடுத்துவிட்டார். தற்போது எனக்கு 90 வயதாகிறது. எனவே, இனிமேல் வைத்துக் கொள்ளக்கூடாது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கும் நேரத்தில் முதல்வர் கையில் கொடுப்பது நியாயமாக இருக்கும் என்று கொடுத்துவிட்டேன். முதல்வரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மருத்துவ கோப்புகள் எத்தனை பக்கம். அதில் என்ன விவரங்கள் உள்ளன?

அதில் அவருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் எவ்வளவு இருந்தது. கிரியாட்டின், யூரியா எவ்வளவு இருந்தது. என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டன என்பது உள்ளிட்ட விவரங்கள் இருந்தன. 35 காகிதங்கள் அதில் உள்ளது.

அன்று இருந்த வெளிப்படைத்தன்மை இன்று இல்லாததற்கு காரணம் என்ன?

விசாரணை நடக்கும்போது இதைப்பற்றி கூற முடியாது. இருப்பினும், அன்று எல்லா விவரங்களும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக பத்திரிகைகளுக்கும் தெரிவித்தோம். ஆனால், அன்றிருந்த நிலைமையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவாக இருந்த நிலைமையுடன் ஒப்பிட முடியாது.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x