Published : 30 Jan 2018 11:33 AM
Last Updated : 30 Jan 2018 11:33 AM

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் விரைவில் மாற்றம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் விரைவில் மாற்றம் வரும் என முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

கோபியில் இந்திய தேசிய காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில், ஈரோடு வடக்கு மாவட்டம் மற்றும் கோபி நகர, வட்டார காங்கிரஸ் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு இந்திய தேசிய காங்கிரஸ் அறக்கட்டளை தலைவர் தில்லைநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் நல்லசாமி வரவேற்று பேசினார். விழாவில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டாரமாக சென்று காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை சந்திக்க உள்ளேன். பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுடன் மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும். கட்டண உயர்வை முன்பு இருந்த அளவிற்கு குறைக்க வேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஆவண செய்ய வேண்டும். இந்த ஆட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தத்தால் கட்சி தொடங்குகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், தமிழகத்திற்காக அங்கு குரல் கொடுப்பதில்லை. இதனால்தான் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வரமுடியவில்லை. மதுவை முழுவதுமாக ஒழிக்க வேண்டும். இல்லையென்றால் கள்ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியாரின் பெயரில் விருது கொடுத்தது தவறு. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் விரைவில் மாற்றம் வரும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x