

திருச்சி: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அதிமுக வாக்குச்சாவடி (பூத் கமிட்டி) முகவர்களுக்கு பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அதிமுக ஐ.டி விங் அறிவுரைகளை வழங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தல் அடுத்த மே மாதம் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற மாநிலக் கட்சிகளும் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. இந்நிலையில், அதிமுக ஐ.டி விங் சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு ‘ரத்தத்தின் ரத்தங்களே’ என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள வாட்ஸ் - அப் செய்தி வருமாறு:
உங்கள் பூத்தில் 51% ஓட்டுகளை வாங்கிக் காட்டுங்கள். அவ்ளோ தான் இலக்கு. ஒன்றியம் ஒத்துழைக்கவில்லை, மாவட்டம் அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்ற பழைய பல்லவிகள் எல்லாம் வேண்டாம். வெற்றி ஒன்றே இலக்காக செயல்பட வேண்டும். உங்கள் பூத்தில் உள்ள வாக்காளர்களில் யார், யார் எந்தெந்த கட்சி என லிஸ்ட் எடுக்க வேண்டும்.
எந்தக் கட்சியையும் சாராதவர்களை சந்தித்து, நம் கட்சி மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் விதமாகஅவர்களிடம் விளக்க வேண்டும். குறிப்பாக 18 வயது முதல் 30 வயது வரையிலான இளம் வாக்காளர்களிடம் இதுவரை அதிமுக என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதையும், அடிப்படைக் கொள்கைகளையும், அதிமுகவுக்கு அவர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்என்பதையும் பொறுமையாக எடுத்துரையுங்கள்.
நீங்கள் தான் அந்த பூத்துக்கு ‘அதிமுக முகம்' என்பதால், முடிந்தவரை எந்தக்கெட்ட பழக்கமும் இல்லாமல் இருங்கள். குறைந்த பட்சம் சிகரெட், மது போன்றவற்றை தவிர்க்கலாம். ஆபாச வார்த்தைகளை பேசுவதைத் தவிர்த்து விடுங்கள். உங்களை வைத்துத் தான் அதிமுக எப்படிப்பட்ட கட்சி, அதிமுகவினர் எப்படிப்பட்டவர்கள் என்பதை மக்கள் கணிப்பார்கள். இவற்றை பின்பற்றினால் அதிமுகவுக்கு நீங்கள் தான் பிரசாந்த் கிஷோர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.