Last Updated : 11 Jan, 2018 10:07 AM

 

Published : 11 Jan 2018 10:07 AM
Last Updated : 11 Jan 2018 10:07 AM

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் பாரம்பரிய பந்தயத்துக்காக வண்டிகள் தயாரிக்கும் பணி: புதுக்கோட்டை மாவட்டத்தில் மும்முரம்

பொங்கல் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரம்பரிய மாட்டு வண்டிப் பந்தயம் நடத்துவதற்காக பந்தய வண்டிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டிப் பந்தயம், குதிரை வண்டிப் பந்தயம் நடத்துவது வழக்கம். நீதிமன்றம் விதித்திருந்த தடையால் சில ஆண்டுகள் பந்தயம் நடைபெறாமல் இருந்தன.

பராமரிக்கப்படாததால் வண்டிகளும் பாழடைந்துவிட்டன. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதியில்தான் மாட்டு வண்டிப் பந்தயம், ஜல்லிக்கட்டுக்கான தடையை அரசு நீக்கியது. எனினும், பழுதடைந்திருந்த வண்டிகளை உடனே புதுப்பிக்க இயலாததால் கடந்த ஆண்டு அவ்வளவாக மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெறவில்லை.

இந்நிலையில், நிகழாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பந்தயம் நடத்துவதற்காக புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் மாட்டு வண்டிப் பந்தயத்துக்காக வண்டிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், வண்டிகளை பழுது நீக்கும் பணியும் நடக்கிறது.

இதுகுறித்து அரிமளத்தில் பந்தய மாட்டு வண்டி தயாரிக்கும் தொழிலாளி எம்.செல்வம் கூறியது: தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், ஈரோடு, கரூர், கோவை, மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மாட்டு வண்டிப் பந்தயம் அதிக இடங்களில் நடைபெறும்.

இதில் பெரிய மாடு, நடுத்தர மாடு, கரிச்சான் மாடு மற்றும் பூஞ்சிட்டு ஆகிய பிரிவுகளில் எல்லை நிர்ணயிக்கப்பட்டு மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெறும் பந்தய வீரர்களுக்கு ரொக்கம், தங்கம் பரிசாக அளிக்கப்படும்.

மரம், கூலியுடன் சேர்த்து ஒரு வண்டி தயாரிப்பதற்கு ரூ.30 ஆயிரம் செலவாகும். சாலையில் இலக்கை நோக்கி அதிவிரைவாக ஓடும்போது வண்டியில் சேதம் ஏற்படாமல் இருக்கவே நாட்டுக் கருவேல மரம், வாகை போன்ற உறுதியான, எடை குறைவான மரச்சட்டங்கள் வண்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு வண்டி செய்வதற்கு ஒரு மாதமாகும். புதிய வண்டிகள் மட்டுமின்றி பழைய வண்டிகளை பழுது நீக்கவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். சில மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட புதிய வண்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஏராளமான பழைய வண்டிகளும் பழுது நீக்கப்பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x