Published : 17 Jan 2018 06:23 PM
Last Updated : 17 Jan 2018 06:23 PM

ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது: திருமாவளவன்

ஹஜ் பயணிகளுக்கு அளிக்கப்பட்டுவந்த மானியத்தை முற்றாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்திருப்பது பாஜக அரசின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஹஜ் பயணிகளுக்கு அளிக்கப்பட்டுவந்த மானியத்தை முற்றாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. இது மத்தியில் ஆளும் பாஜக அரசின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஹஜ் மானியம் என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். அது நேரடியாக முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை. முஸ்லிம்கள் எவரும் இலவசமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவும் இல்லை. சவுதி அரேபிய அரசு ஹஜ் யாத்திரை நேரத்தில் விதிக்கும் சிறப்பு கட்டுப்பாடுகளின் காரணமாக வழக்கமான காலத்தில் வாங்குவதைப்போல சுமார் மூன்று மடங்கு கட்டணத்தை விமான நிறுவனங்கள் விதித்து வந்தன. கூடுதலாக விதிக்கப்பட்ட கட்டணத்தின் ஒரு பகுதியைத்தான் மத்திய அரசு வழங்கி வந்தது. ஹஜ் பயணம் செல்லும் ஒவ்வொருவரும் வழக்கமான விமானக் கட்டணம் அளவுக்கு பணம் செலுத்தித்தான் பயணம் மேற்கொண்டனர். கூடுதல் கட்டண விதிப்புக்கான காரணங்களை ஆராய்ந்து சவுதி அரேபிய அரசுடனும், விமான நிறுவனங்களோடும் பேசி அதைக் குறைப்பதற்குப் பதிலாக மானியத்தை ரத்து செய்வது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.

பாஜக அரசு தனது நடவடிக்கைக்கு 2012-ம் ஆண்டில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டியுள்ளது. அந்தத் தீர்ப்பு ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கும் மத்திய அரசின் கொள்கையை ரத்து செய்யவில்லை. மாறாக, அந்தக் கொள்கை அரசியலமைப்புச் சட்ட அடிப்படையில் சரியானது என 2011-ம் ஆண்டு அதே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது. முஸ்லிம் மதத்தினருக்கு மட்டுமின்றி பிற சமயங்களின் நிகழ்ச்சிகளுக்கும்கூட நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கத்தின் பணமும் சக்தியும் செலவிடப்படுவதையும் அந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஹஜ் மானியம் ரத்து செய்த பாஜக அரசு கும்பமேளாவுக்கும், மானசரோவர் யாத்திரைக்கும் செலவிடும் தொகையை நிறுத்துமா? பல்வேறு மாநில அரசுகள் மத வழிபாட்டுத் தலங்களுக்காகவும், பண்டிகைகளுக்காகவும், யாத்திரைகளுக்காகவும் செலவிடுகிற தொகையை எல்லாம் நிறுத்தச் சொல்லுமா? ஹஜ் மானிய ரத்து என்பது அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பு அரசியலே தவிர வேறில்லை.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக பாஜக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையைக் கண்டிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும்'' என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x