

இராக் நாட்டில், உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வரும் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள், தாயகத்துக்கு சனிக்கிழமை திரும்பினர். அவர்களில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் எடத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பகிரதன்(45), தனது வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பினார். அவரை கண்ணீர் மல்க, அவரது மனைவி லட்சுமி, மகள் சங்கவி, மகன் கோகுல் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர்.
குண்டு வெடிக்கும் சத்தம்
இதுகுறித்து பகிரதன் கூறும்போது, “இராக் நாட்டிற்கு ரூ.1.50 லட்சம் செலவு செய்து 1.11.2013 அன்று சென்றேன். திருக்குக் பகுதியில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகம் கட்டுமான பணியில் ஈடுபட்டேன். ஒரு மாதத்துக்கு 400 அமெரிக்க டாலர், ஊதியமாக வழங்கப்பட்டது. டெண்ட் ஒன்றில் 350 பேர் தங்கியிருந்தோம். 2 கி.மீ. பரப்பளவு உள்ள இடத்துக்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நாங்கள் தங்கியிருந்த பகுதியைச் சுற்றி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். குண்டு வெடிப்பதை நேரடியாக பார்த்தோம். சண்டை நடப்பதை அறிந்ததும், உயிருக்கு பயந்து இராக் நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் வெளியேறிவிட்டனர். அவர்கள் சென்றது எங்களுக்கு தெரியாது. ஒரு மாதமாக, நாங்கள் வெளியே செல்லவில்லை. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை இருந்தது. உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.
பட்டினி கிடந்தோம்
இராக் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொலைபேசி மற்றும் இ-மெயில் மூலமாக தொடர்பு கொண்டு, எங்கள் நிலையை விளக்கினோம். சில தினங்களில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. பணம் இல்லாததால், குடும்பத்தில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள்தான் தொடர்பு கொள்வர். சாப்பாட்டிற்கு ரொம்ப கஷ்டப்பட்டோம். பல வேளைகளில் பட்டினியாக இருந்தோம். கஞ்சி காய்ச்சி குடித்தோம். 4 மாத சம்பளம் வழங்கப்படவில்லை. மின்சாரம் கிடையாது. எங்களை பணியமர்த்திய அல் ரவாதி நிறுவனத்தை தொடர்புகொள்ள முடியவில்லை.
எங்களுக்கு பாதுகாப்பு வழங்கிய 8 போலீஸார், காரில் சென்றபோது சுட்டு கொல்லப்பட்டதை கண்கூடாக பார்த்தோம். பதற்றமான சூழ்நிலையில், மரண பீதியில் இருந்தோம். எங்கள் நிலையை உணர்ந்து, எங்களை மீட்ட மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். உயிருடன் தமிழகம் திரும்பியதும், இரவு தங்கவைத்து உணவு வழங்கி, அரசு செலவிலேயே காரில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
வட்டிக்கு பணம் வாங்கி செலவு செய்துதான், இராக் நாட்டுக்கு சென்றேன். எங்கள் குடும்பத்துக்கு நல்லது நடக்க, தமிழக முதல்வர் நல்வழி காட்ட வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசுக்கு நன்றியை தெரிவிக்கவும், மாற்று வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆட்சியரை சந்தித்து முறையிடவுள்ளோம். இனி இராக் நாட்டிற்கு மீண்டும் போகமாட்டேன்” என்றார்.