Published : 12 Nov 2023 05:05 AM
Last Updated : 12 Nov 2023 05:05 AM

வாணியம்பாடி விபத்து | மீட்புப் பணியில் ஈடுபட்ட தலைமைக் காவலர் மாரடைப்பால் மரணம்

வாணியம்பாடி அருகே விபத்தில் சிக்கிய சொகுசுப் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள். (உள்படம்) மாரடைப்பால் உயிரிழந்த தலைமைக் காவலர் முரளி.

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே சொகுசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 6 பேர்உயிரிழந்தனர். மேலும், மீட்புப் பணியில் இருந்த தலைமைக் காவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு அரசு சொகுசு விரைவு பேருந்து நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை (47) பேருந்தை ஓட்டினார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலை தரைப்பாலம் மீதுநேற்று அதிகாலை 4.45 மணியளவில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவில் இருந்த தடுப்புகளைக் கடந்து, எதிர்திசையில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னிப் பேருந்து மீது மோதியது. இதில் இரு பேருந்துகளின் முன் பகுதியும் நொறுங்கின.

அதிகாலை நேரத்தில் உறக்கத்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். அவ்வழியாக சென்றவர்கள் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் திரண்டு, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணியைதுரிதப்படுத்தினர். மீட்கப்பட்டபயணிகள் ஆம்புலன்ஸ்கள் மூலம்வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநர் ஏழுமலை, சென்னை மேடவாக்கம் கிருத்திகா(35), வாணியம்பாடி புதூர் முகமது பைரோஸ்(36), ஆந்திர மாநிலம் சித்தூர்மாவட்டம் ஸ்ரீஹரிபுரம் அஜித்குமார்(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்கள், வேலூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சிகிச்சைக்கு செல்லும் வழியில் தனியார் பேருந்தின் ஓட்டுநரான கர்நாடக மாநிலம் கோலார் நூர் நகரைச் சேர்ந்த சையது நதீம்(40) மற்றும் வேலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சென்னை அடையாறு ராஜு (50) ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த 20 பெண்கள் உள்ளிட்ட 55 பேர், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து நேரிட்ட இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், எஸ்.பி. ஆல்பர்ட் ஜான்,எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர்ஆய்வு மேற்கொண்டதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரை சந்தித்து ஆறுதல் கூறினர்.இதற்கிடையில், வாணியம்பாடியில் சிகிச்சை பெற்றவர்களில் 27 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மாரடைப்பால் உயிரிழப்பு: விபத்தின்போது வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய தலைமைக் காவலர் முரளி (42) மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் காவல் நிலையத்தில் ஓய்வில் இருந்தார். சில மணி நேரம் கழித்து சக போலீஸார் அவரை எழுப்ப முயன்றபோது, உறக்கத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. திடீர் மாரடைப்புகாரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x