Published : 12 Nov 2023 06:20 AM
Last Updated : 12 Nov 2023 06:20 AM

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் இரண்டாக பிரிப்பு: நவ. 15-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது

சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் டெர்மினல் 1, டெர்மினல் 4 என இரண்டாக பிரிக்கப்பட்டு, நவ. 15-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தை, 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.2,467 கோடி திட்டத்தில் இரண்டு கட்டங்களாக கட்டுவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த 2018-ம் ஆண்டில் முடிவு செய்து பணிகளை தொடங்கியது. அதில் முதல் கட்ட பணி, 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.1,260 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், டெர்மினல் 2-ஐ (டி 2) கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். புதிய முனையத்தில் விமான சேவை கடந்த ஜூலை 7-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே சர்வதேச முனையமாக செயல்பட்டுக் கொண்டிருந்த டெர்மினல் 3, 4 ஆகியவை முழுவதுமாக மூடப்பட்டன. டெர்மினல் மூன்றை இடிக்கும் பணி நடக்கிறது. அந்த பணி முடிந்ததும், விமான நிலைய இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளன.

பழைய சர்வதேச முனையத்தின் டெர்மினல் 4 நல்ல நிலையில் இருப்பதால், அதை இடிக்காமல் கூடுதல் உள்நாட்டு விமான முனையமாக பயன்படுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, சர்வதேச முனையமாக இருந்த, டெர்மினல் 4-ஐ, உள்நாட்டு முனையமாக மாற்றி அமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, நவ. 15-ம் தேதி இந்த புதிய உள்நாட்டு முனையம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. முன்னதாக நவ. 14-ம் தேதி புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4-ல் சோதனை அடிப்படையில் விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது போன்றவை நடைபெறவுள்ளன.

எந்த விமானங்கள் எந்த டெர்மினலில் இருந்து புறப்படும் என்பது பற்றிய அறிவிப்பு பலகைகள், பயணிகள் வசதிக்காக அடுத்தஓரிரு தினங்களில் அமைக்கப்படவுள்ளன. சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 1, டெர்மினல் 4 என்று இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதால், கூடுதல் இடவசதியும் கிடைக்கும். கூடுதல் விமான சேவைகள் இயக்க முடியும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x