Published : 28 Jan 2018 10:17 AM
Last Updated : 28 Jan 2018 10:17 AM

கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் பலியான வழக்கில் குற்றத்தை நிரூபிக்கத் தவறிய அதிகாரிகள் மனசாட்சியிடம் மன்னிப்பு கோர வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் பலியான வழக்கில் குற்றத்தை நிரூபிக்கத் தவறிய அரசு அதிகாரிகள், தங்கள் மனசாட்சியிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு கிராமத்தில் கடந்த 2001-ம் ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் பலியானார்கள்.

21 பேர் மீது வழக்கு

இந்த சம்பவம் தொடர்பாக கஸ்தூரி, பார்த்திபன், ஏழுமலை உள்ளிட்ட 21 பேர் மீது செங்குன்றம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 2 பேர் விசாரணையின்போது இறந்து விட்டதால் எஞ்சிய 19 பேர் மீதான வழக்கு பொன்னேரி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் 82 பேர் சாட்சியம் அளித்தனர். ஆனால் இதில் பலர் பிறழ்சாட்சியம் அளித்தனர். இதனால் அரசு தரப்பு குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக்கூறி, குற்றம் சாட்டப்பட்ட 19 பேரையும் பொன்னேரி நீதிமன்றம் விடுதலை செய்து கடந்த 2011-ல் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மாதவரம் டிஎஸ்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

கனத்த இதயத்துடன் பார்க்கிறது

பலியான 35 பேர் மற்றும் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினரை கனத்த இதயத்துடன் இந்த நீதிமன்றம் நினைத்துப் பார்க்கிறது. ஒரு குற்றத்தை சரியாக, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தால்தான் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்கும். ஆனால் இந்த வழக்கில் அரசு இயந்திரம் தனது கடமையை முறையாக செய்யத் தவறிவிட்டது. குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை என பொன்னேரி நீதிமன்றம் 19 பேரையும் விடுவித்துள்ளது. அதேநேரம் 35 பேர் பலியான இந்த வழக்கில் சட்டம் தனது கடமையை சரியாக செய்யாவிட்டால் ‘வாய்மையே வெல்லும்’ என்பது கேள்விக்குறியாகி விடும்.

கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டியது அரசின் கடமை. இந்த சூழலில் கள்ளச்சாராய தடை சட்டம் முறையாக அமலில் உள்ளதா? அரசு இயந்திரம் முறையாக செயல்படுகிறதா? என்பது சந்தேகத்தை வரவழைக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக...

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. எனவே இந்த நீதிமன்றம் துரதிர்ஷ்டவசமாக பொன்னேரி நீதிமன்றத்தின் உத்தரவை வேதனையுடன் உறுதி செய்கிறது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீ்ட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் பலியான இந்த வழக்கில் குற்றத்தை சரியாக நிரூபிக்கத் தவறிய அரசு அதிகாரிகள் தங்களது மனசாட்சியிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x