Published : 19 Jan 2018 11:20 AM
Last Updated : 19 Jan 2018 11:20 AM

அறுவை சிகிச்சையின்போது குழந்தையின் உடல் உறுப்புக்குள் துணி வைத்து தைத்ததாக புகார்: 3 மருத்துவர்கள் மீது வழக்கு

கோவையில் அறுவை சிகிச்சையின்போது குழந்தையின் உடல் உறுப்புக்குள் துணி, பஞ்சு வைத்து தைத்ததாக எழுந்த புகாரின்பேரில், 3 மருத்துவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து காட்டூர் காவல் துறையினர் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம் பழநி தாலுகா சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். காய்ச்சல் காரணமாக இவரது நான்கரை வயது குழந்தையை, கடந்த ஆகஸ்ட் மாதம் கோவை ராம் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், கடந்த செப்.8-ம் தேதி குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் வலி குறையாமல், சிறுநீரகக் கோளாறு தொடர்ந்தது. ஆனால், வலி குணமாகிவிடும் என அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே திருச்சியிலும், கோவை ஆர்.எஸ்.புரத்திலும் உள்ள வேறு சில தனியார் மருத்துவமனைகளில் சென்று பரிசோதித்தபோது, குழந்தையின் சிறுநீரகத்தில் மூத்தரப்பை உள்ளே கட்டி போன்ற அசையும் பொருள் இருப்பது தெரியவந்தது. கடந்த 3-ம் தேதி ஆர்.எஸ்.புரம் தனியார் மருத்துவமனையில் 2-வது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, உள்ளே இருந்த துணி வெளியேற்றப்பட்டது.

இதுதொடர்பாக கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் வினோத்குமார் புகார் அளித்தார். மேலும், அறுவை சிகிச்சையின்போது கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் உடல் உறுப்புக்குள் துணி வைத்து தைத்த 3 மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு அளித்திருந்தார். இதுகுறித்து காட்டூர் காவால் துறையினர் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 337-ன் கீழ், மருத்துவர்கள் தர்மேந்திரா, வினோத், கண்ணதாசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x