Published : 11 Nov 2023 06:00 AM
Last Updated : 11 Nov 2023 06:00 AM

சென்னையின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியில் 18,000 போலீஸார்: தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் ஆய்வு

தீபாவளிக்காக சென்னையில் பல்வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது ட்ரோன் முலம் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகளை பார்வையிட்டார். காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), இணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி (தெற்கு மண்டலம்) உள்ளிட்டோர் உடனிருந்தனர். படம்: ம.பிரபு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னைமாநகரின் முக்கிய இடங்களில் 18 ஆயிரம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்நேற்று நேரில் ஆய்வு செய்தார். தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு புத்தாடைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நெரிசலைப் பயன்படுத்தி யாரேனும் சமூக விரோதிகள் அசம்பாவித செயல்களில் ஈடுபட்டு விடக்கூடாது, கொள்ளையர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக சென்னையில் காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக சென்னையில் தி.நகர், பாண்டி பஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்தை நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படைமற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 18,000 போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தி.நகரில் 7, வண்ணாரப்பேட்டையில் 3, கீழ்ப்பாக்கத்தில் 3, பூக்கடையில் 4 என மொத்தம் 17 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதன் மீதுநின்றவாறு போலீஸார் தொலைநோக்கி கருவி மூலம் சுழற்சி முறையில் கண்காணிக்கின்றனர். தி.நகர் மற்றும் பூக்கடை பகுதிகளில் தலா 2 என 4 ட்ரோன் கேமராக்கள் மூலம் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், பழைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக முக அடையாளம் காணும்செல்போன் செயலி மூலம் போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னைகாவல் ஆணையர் சந்தீப் ராய்ரத்தோர், தி.நகர் ரங்கநாதன் தெரு,உஸ்மான் சாலை, தி.நகர் பேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் நேற்றுதிடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் போலீஸாருக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார். காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு),இணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி(தெற்கு மண்டலம்) மற்றும் போலீஸ்அதிகாரிகள் உடனிருந்தனர்.

பொது மக்களுக்கு யார் மீதேனும்சந்தேகம் இருந்தால் அதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், போலீஸார் சந்தேக நபர்களிடம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ``நீதிமன்ற உத்தரவுப்படி காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க அனுமதி உள்ளது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x