சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த 117 மருந்து கடைகள் மீது நடவடிக்கை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சட்டவிரோதமாக கருக்கலைப்பு, போதை தரக்கூடிய மாத்திரைகளை விற்பனை செய்த 117 மருந்து கடைகள் மீது மருந்து கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மற்றும் போதை தரக்கூடிய மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சட்டவிரோதமாக கருக்கலைப்பு மற்றும் போதை தரக்கூடிய மாத்திரைகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 117 மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``தமிழகத்தில் மருந்து விற்பனை கடைகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஒவ்வொரு கடைகளும் தாங்கள் விற்பனை செய்யும் மருந்து, மாத்திரைக்கான ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக, கருக்கலைப்பு, போதை தரக்கூடிய மாத்திரை விற்பனை குறித்த ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அவ்வாறு ஆவணங்கள் இல்லாமல் இருந்த 117 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 6 கடைகளுக்கு விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in