

திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சி மாவட்ட பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இம்மழையால் திருவள்ளூர்மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளான புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதில், நேற்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 606 கன அடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால், நேற்று காலை நிலவரப்படி 3,300 மில்லியன் கன அடிகொள்ளளவு, 21.20 அடி உயரம்கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு, 2,745 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 18.67 அடியாகவும் இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதே போல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு, விநாடிக்கு 368கன அடி மழைநீர் வந்து கொண்டிக்கிறது. ஆகவே, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,141 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம்22.08 அடியாகவும் உள்ளது. இதில், சென்னை குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 104கன அடியும், உபரி நீர் விநாடிக்கு 25 கன அடியும் திறக்கப்படுகிறது என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.