Published : 11 Nov 2023 06:18 AM
Last Updated : 11 Nov 2023 06:18 AM
சென்னை: அரசு பேருந்துகளை இயக்கி சென்னை வரும் வெளியூர் ஓட்டுநர்களுக்கு உணவு, ஓய்வுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் த.வெ.பத்மநாபன் போக்குவரத்துத் துறைஅமைச்சர் சா.சி.சிவசங்கருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது: தீபாவளியையொட்டி பல்வேறுமாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்கள் அடுத்த நடை பேருந்துகளை இயக்கும் முன் ஓய்வு எடுக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
குறிப்பாக கோயம்பேடு கிளை பேருந்து நிலைய பணிமனைகளில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஓய்வெடுக்க அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் சிறப்புப்பேருந்துகளை இயக்கி வருவோரை குளிப்பதற்கு அனுமதிப்பதில்லை. அவர்கள் குளிப்பதால் கூடுதல்நீர் பற்றாக்குறை ஏற்படுவதாகக் கூறி கடந்த ஆண்டு பாதுகாவலர்களைக் கொண்டு உயர் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
இது ஒருபுறமிருக்க வெளியூர் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இதர பணியாளர்களுக்கு உணவகத்தில் எக்காரணம் கொண்டும் உணவு வழங்கக் கூடாது என கோயம்பேடு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை மற்றும் விழுப்புரம் பணிமனை நெருக்கடி கொடுத்து வருகிறது. எனவே, கடந்த ஆண்டுகளைப் போல நிகழ்வுகள் ஏற்படாமல் சிறப்பு இயக்க பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT