

ஆண்டிபட்டி: பெரியாறு பிரதான கால்வாய் பகுதியின் முதல்போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. பெரியாறு பிரதான கால்வாய் பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து ஜூனில் முதல் போகத்துக்கும், செப்டம்பரில் இரண்டாம் போகத்துக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக் கம். தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால், முதல் போகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. இந்நிலையில், சில வாரங்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது.
கடந்த 8-ம் தேதி 69 அடியை எட்டியதால் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் பாசனத்துக்கு அணையைத் திறக்க திண்டுக்கல், மதுரை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து நேற்று அணை நீர் திறந்து விடப்பட்டது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்து மதகுகளை இயக்கி நீரை திறந்து விட்டனர். தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் ஷஜீவனா, சங்கீதா, பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விநாடிக்கு 900 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், அடுத்த 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட் களுக்கு 6 ஆயிரத்து 739 மில்லி யன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட ஆயிரத்து 797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட 16 ஆயிரத்து 452 ஏக்கர், மதுரை வடக்கு வட்டத்துக்கு உட்பட்ட 26 ஆயிரத்து 792 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பயன் அடையும். இதில் எம்எல்ஏக்கள் கேஎஸ்.சரவணக்குமார் (பெரிய குளம்), ஆ.மகாராஜன் (ஆண்டி பட்டி), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன், பெரியாறு வைகை வடிநிலக் கோட்டச்செயற்பொறியாளர் ந.அன்புச்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.