Last Updated : 31 Jan, 2018 09:08 AM

 

Published : 31 Jan 2018 09:08 AM
Last Updated : 31 Jan 2018 09:08 AM

சாலையோரங்களில் சட்டவிரோத மது: மதுக்கடைகளை போராடி மூடிய மக்களுக்கு மீண்டும் சோதனை

சாலையோரங்களில் பல வகையான பொருட்களை கடைவிரித்து விற்பனை செய்வதைப் பார்த்திருப்போம். காய்கறிகளைப் போல, சாலையில் கடை விரித்து மதுபானம் விற்பனை செய்வதைப் பார்க்க முடியுமா?.

ஓரிரு கடைகள் அல்ல, திரும்பும் திசை எங்கும் குட்டி குட்டி மதுக்கடைகள் சாலையோரத்தில் வரவேற்கின்றன. கும்மிருட்டில் தலையில் கட்டியுள்ள டார்ச்லைட் வெளிச்சத்தில் பாட்டில்களை கொடுத்து பணத்தை பெறுகிறார் வியாபாரி. எதிரில் பாட்டில்களுக்கு கூடுதல் விலைகொடுத்து வாங்கவும் கூட்டம் போட்டிபோடுகிறது. அதன் அருகிலேயே நொறுக்கு தின்பண்டங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனைக்கு மற்றொரு கடை, சாப்பாட்டுக்கு மற்றொரு கடை என அந்த இடமே விநோதமான விற்பனைச் சந்தையாக காட்சி யளிக்கிறது.

இப்படி தாராளமாக மது கிடைப்பது தமிழ்நாட்டின் கோவையில் தான். அவிநாசி சாலையில் முக்கிய இடமாக, மதுக்கடை எதிர்ப்புக்கு போராட்டங்கள் பல கண்ட சோமனூர், கருமத்தம்பட்டி பகுதியில்தான் இந்த அவல நிலை. டாஸ்மாக் கடைகளை விட பல மடங்கு விற்பனையில் சாதித்துக் கொண்டிருக்கின்றன இந்த குட்டி மதுக்கடைகள். ஆனால் எங்கிருந்து இவர்களுக்கு மது பாட்டில்கள் கிடைக்கின்றன, விற்பனை செய்பவர்கள் யார், அரசு அனுமதித்த மது வகைகள் தானா? என்பதெல்லாம் கேள்விகளாகவே தொடர்கின்றன. மதுக்கடைகளை மூட வேண்டுமென போராடிக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் அனைவரும், அதைவிட மோசமான இந்த கள்ள மது சந்தையை எப்படி தடுப்பது என குழம்பித் தவிக்கின்றனர்.

வீட்டுக்கே டெலிவரி?

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடம் கேட்டபோது, ‘மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு அருகே கள்ள மது விற்பனை தொடங்கியது. கருமத்தம்பட்டி போலீஸில் புகார் அளித்துப் பார்த்தோம், பயனில்லை. அவிநாசி சாலையின் ஓரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ரெஸ்டாரண்டுகளில் அரசு மதுபாட்டில்கள் விற்பனைக்கு வந்தன. அப்போதும் மனு கொடுத்தோம், நடவடிக்கை இல்லை. அதன் பிறகு சாலையோரங்களில் சிறிய அளவில் மதுக் கடைகள் திறக்கத் தொடங்கிவிட்டனர். போனில் தொடர்பு கொண்டால் வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் அளவுக்கு இங்கு டாஸ்மாக் சேவை வளர்ந்துள்ளது.

கருமத்தம்பட்டி நான்குரோட்டில் சிறிது நேரம் நின்றால் போதும், நேரடியாக வந்து மது வேண்டுமா எனக் கேட்கிறார்கள். சோமனூர் லாரிப்பேட்டை, ரயில்நிலையம், ரயில்வே பாலத்தின் கீழ் பகுதி என பெருகிய மதுவிற்பனை, தற்போது கருமத்தம்பட்டி காவல் நிலையம் அருகேயே நடக்கிறது. போலீஸாரும் கண்டும், காணாமலும் விட்டுள்ளனர்’ என்றனர் வேதனையோடு. பிரபாகரன் என்பவர் கூறும்போது, ‘மதுக் கடைகளை மூடி மதுவே இல்லாத கிராமங்களாக மாற்றினோம். தற்போதைய நிலை தலைகீழாக உள்ளது. டாஸ்மாக் கடை இல்லாமல் எப்படி மது விற்க முடியும் எனக் கேட்டால், போலீஸ் அனுமதியோடுதான் விற்கிறோம் என்கிறார்கள். எஸ்பியிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x