

தமிழ்நாடு அரசின் தவறான அணுகுமுறையால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நான்காம் நாளாக தொடர்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்த அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் தவறான அணுகுமுறையால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நான்காம் நாளாக தொடர்கிறது. இதனால் ஏற்பட்ட சிரமங்களும் தொடர்கின்றன. தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தக் கோரிக்கை மீது கடந்த 17 மாதங்களில் 22 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஏன் தீர்வு காண முடிவில்லை? தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய ஓய்வூதியம், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்பட ரூ 7 ஆயிரம் கோடியை, நிர்வாகத் தரப்பில் சட்டவிதிகளை அத்துமீறி எடுத்து கொண்டிருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்.
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் போது அரசு விடுத்த வேண்டுகோள்படி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு அமைதியாக காத்திருந்தனர்.
ஆனால், அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்த நிலையில், தொழிலாளர் துறை அலுவலர்களை வைத்து, ஒரு தலைபட்சமான ஒப்பந்தம் போட்டு, தொழிலாளர்களை வஞ்சிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதை எப்படி நியாயப்படுத்த முடியும். அமைதி காத்து வரும் தொழிலாளர்களை அரசின் நியாயமற்ற தொழிலாளர் நடவடிக்கை (Un Fair Labour Practice) ஆத்திரமூட்டியதால் போராட்டம் நடந்து வருகிறது என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
இனி பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தற்போது உயர் நீதி மன்றத்தின் உத்திரவைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என அரசு கருதுவது ‘எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமைந்து விடும்’ என எச்சரிக்கை செய்கிறோம்.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் காவல்துறையை நிர்பந்தித்து தொழிலாளர்கள் மீது வன்முறை வழக்குகள் பதிந்து வருகின்றனர். தொழிலாளர் வீடுகளுக்கு சென்று, குடும்பத்தினரை மிரட்டி வருகின்றனர். உயர்நீதிமன்றத்தின் பெயரால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகின்றன.
பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. ஜனநாயக நெறிமுறைகளுக்கும், ஒப்புக்கொள்ளப்பட்ட தொழிலாளர் நலக் கோட்பாடுகளுக்கும் எதிரான அரசின் இந்த நடவடிக்கை சுமுகத் தீர்வுகாண உதவாது என சுட்டிக்காட்டி, மாண்புமிகு முதல்வர் சுயகௌரவம் பார்க்காமல் பிரச்சனையில நேரடியாக தலையிட்டு தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து பேசி சுமுகத் தீர்வுகாண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.