

தமிழக ஆளுநர் செயல்பாடு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநரின் செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், "காலவரையறையின்றி மசோதாக்களை கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது" என்று கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மேலும் கூறுகையில், “ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். ஒருவேளை அது நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது அதில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைத்து அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கலாம். ஆனால், எதுவுமே செய்யாமல் காலவரையின்றி மசோதாக்களை கிடப்பில் போட முடியாது” என்றார்.
‘திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் வளரும்’ - முதல்வர்: “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்கின்ற வரைக்கும், திராவிட மாடல் அரசின் இந்தப் பணி நிச்சயம் தொடரும். இதுதான் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி. திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக, தமிழ்நாடு தொடர்ந்து வளரும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆர்.பி.உதயகுமார் விவகாரம்: சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரிய வழக்கில், வரும் டிசம்பர் 12-ம் தேதிக்குள் சட்டமன்ற செயலாளர், சபாநாயகர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 10% போனஸ்: தமிழகத்தில் உள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
“தேர்தலில் டெபாசிட் இழக்கவே அண்ணாமலை பேச்சு உதவும்”: "சமூக நீதியைப் பாதுகாத்த பெரியாரையும், காமராஜரையும் இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது. 2024 மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே அண்ணாமலையின் பேச்சுகள் உதவப் போகின்றன” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்: பாஜக கொடிக்கம்பம் அமைக்கும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அக்கட்சியின் மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மலை கோயில் ராஜகோபுரம் எதிரில் வணிக வளாகம் கட்ட தடை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் எதிரில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டும் அறநிலையத் துறை நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பித்த நிமிடத்திலிருந்து தடை அமலுக்கு வருகிறது. எனவே, எந்தவித கட்டுமான பணிகளிலும் மேற்கொள்ளக்கூடாது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
“சிறு தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதமே ஜிஎஸ்டி” - ராகுல் காந்தி: ஜிஎஸ்டி என்பது வரியல்ல என்றும், அது சிறு குறு நடுத்தரத் தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம் என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, “மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. உண்மையில் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பவர்கள் அவர்கள்தான். பாஜக ஆட்சியில், இத்தகைய நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அவர்கள் சிறு, குழு, மத்தியத் தர நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்றவற்றைக் கொண்டு வந்தார்கள். ஜிஎஸ்டி என்பது வரியல்ல. அது சிறு, குழு, நடுத்தர நிறுவனங்களை ஒழிப்பதற்கான ஆயுதம்" என்று தெரிவித்தார்.
டெல்லியில் காற்று மாசுவை கரைத்த மழை!: தலைநகர் டெல்லியில் வியாழக்கிழமை இரவு ஆங்காங்கே மழை பெய்ததால் அங்கு காற்று மாசுபாட்டின் அளவு சற்றே குறைந்துள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக் குறையீடு 408 என்ற அளவில் இருந்தது. வியாழக்கிழமை மாலை இது 437 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால், டெல்லியில் ஒற்றை - இரட்டை இலக்கத் திட்டத்தினை செயல்படுத்துவதை ஒத்திவைப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
காசாவில் தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தம்: காசாவில் தினமும் 4 மணி நேரம் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது விளக்கத்தை அளித்துள்ளார். அவர் கூறுகையில் "போர் நிறுத்தம் என்பது ஆங்காங்கே மேற்கொள்ளப்படும். ஆனால் இது மீண்டும் மீண்டும் நடக்குமா எனத் தெரியவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நாங்கள் போர் மேற்கொண்டுள்ளோம். ஆகையால் வடக்கு காசாவில் உள்ள பொது மக்கள் பத்திரமாக வெளியேறும் வகையில் சில மணி நேரங்கள் தாக்குதல்கள் நிறுத்தப்படும். அதுவும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே. பொது மக்களின் நலன் கருதி இது மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.