Published : 10 Nov 2023 02:44 PM
Last Updated : 10 Nov 2023 02:44 PM

ராணிப்பேட்டை மக்கள் குறைதீர்வு கூட்ட வளாகத்தில் சீரற்ற முறையில் நிறுத்தப்படும் வாகனங்களால் முதியோர் அவதி

ராணிப்பேட்டை மக்கள் குறைதீர்வு கூட்ட வளாகத்தில் சீரற்ற முறையில் நிறுத்தப்படும் வாகனங்களால் முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். | படம்:ப. தாமோதரன

ராணிப்பேட்டை: மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் வளாகத்தில் வாகனங்கள் சீரற்ற முறையில் நிறுத்தப்படுவதால் மாற்றுத் திறனாளிகளும், முதியவர்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர். ராணிப்பேட்டை பாரதி நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நாளில் மாவட்டத்தின் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும், பொது மக்களும் தங்களின் வாகனங்களில் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகின்றனர். இதுதவிர மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகளும் மனு அளிப்பதற்காக காரில் வருகின்றனர். இதேபோல், இரு சக்கர வாகனங்கள் மற்றும் காரில் வருபவர்கள், வாகனங்களை முறையாக நிறுத்துவதில்லை. அவரவர்கள் தாங்கள் நினைக்கும் இடத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்க வருபவர்கள், வாகனங்களுக்கு இடையே உள்ள சிறிய இடைவெளிகளை கடந்து மனுக்களை பதிவு செய்யும் இடத்துக்கு மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டியிருக்கிறது.

மக்கள் குறைதீர்வு கூட்ட நாளில் பொது மக்கள் பெட்ரோல் கேன் உட்பட தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வந்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்க நுழைவு வாயிலில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.அதேபோல், மனுக்கள் பதிவு செய்யும் இடங்களிலும், கூட்டரங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மக்களை முறைப்படுத்தி அனுப்பவது மட்டுமே தங்கள் பணி என உள்ளனர். இங்கு, வரும் வாகனங்களை முறையாக நிறுத்தவும், தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதை கண்காணித்து அவர்களை முறைப்படுத்தும் பணிகளை காவல்துறையினர் மேற்கொள்வதில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடம் இருந்தும், அவைகளை முறையாக மக்கள் யாரும் பயன்படுத்துவதே இல்லை. சில அரசு அதிகாரிகளும் தங்களின் இரு சக்கர வாகனங்கள், அரசு வாகனங்களையும் இங்கு அவர்கள் நினைத்த இடத்தில் நிறுத்துகின்றனர். அரசியல்வாதிகள் சிலர் மனு பதிவு செய்ய செல்வதற்கு முன்பு உள்ள படிக்கட்டு அருகே காரை கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.

இதன்காரணமாக, நுழைவு வாயிலில் இருந்து மாற்றுத்திறனாளி, முதியவர்களை அழைத்து வர பேட்டரி வாகனம் கூட, கூட்டம் நடக்கும் இடத்துக்கு சில அடி தூரம் நிறுத்தி விட்டு செல்ல வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இங்கு பணியில் இருப்பவர்கள் மக்களை முறைப்படுத் தினால் போதும் என நினைத்து, சிறிது நேரத்தில் அவர்கள் ஓரமாக ஒரு இடத்தில் அமர்ந்து கைபேசியில் மூழ்கவும், கதை பேசவும் ஆரம்பித்து விடுகின்றனர். அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அலட்சியத் தால் பாதிக்கப்படுவது என்னவோ மாற்றுத்திறனாளிகளும், முதியவர்களும்தான். வரும் வாரங்களில் வாகனங்கள் நிறுத்துவதை அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும்" என்றனர். அரசியல்வாதிகள் சிலர் மனு பதிவு செய்ய செல்வதற்கு முன்பு உள்ள படிக்கட்டு அருகே காரை கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x