Published : 10 Nov 2023 08:00 AM
Last Updated : 10 Nov 2023 08:00 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை: காட்டாற்று ஓடைகளில் வெள்ளப் பெருக்கு

தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரக்குடி அருகே மழை வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. அப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் தற்காலிகமாக சீரமைப்பு பணி நடைபெற்றது. படங்கள்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் காட்டாற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தூத்துக்குடி அருகே தரைப்பாலம் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதால் 5 பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரலாக மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தின் வடக்கு பகுதிகளான ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தினமும் இரவு நேரங்களில் பெய்யும் மழையால் மானாவாரி பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவும் பரவலாக பலத்த மழை பெய்தது. ஓட்டப்பிடாரம், மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இப்பகுதிகளில் உள்ள காட்டாற்று ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியில் இருந்து செக்காரக்குடிக்கு செல்லும் சாலையில் கீழ செக்காரக்குடி பகுதியில் ஓடையின் குறுக்கேயுள்ள தரைப்பாலத்தில் ஆண்டு தோறும் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதையடுத்து இப்பகுதியில் நபார்டு வங்கி உதவியுடன் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடையாததால் தற்காலிகமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த தரைப் பாலத்தை சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

5 பள்ளிகளுக்கு விடுமுறை: இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் இந்த ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மக்கள் ஓடையை கடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் இந்த பகுதியில் உள்ள 4 தொடக்கப்பள்ளிகள் மற்றும் ஒரு மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி உத்தரவிட்டார். காட்டாற்று ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் இரும்பு குழாய்களை போட்டு அதன் வழியாக ஆபத்தான வகையில் ஓடையை கடந்து சென்றனர்.

ஓட்டப்பிடாரம், மணியாச்சி பகுதிகளில் பெய்த பலத்த மழையால் புதுக்கோட்டை உப்பாற்று ஓடையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

தூத்துக்குடி தபால் தந்தி காலனி பகுதியில் மழைநீர் தேங்கிய
இடங்களை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.

மழைநீர் தேக்கம்: மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், தெருக்களில் மழைநீர் குளம்போல தேங்கியது. இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மாநகராட்சி பணியாளர்கள் மழை நீரை வெளியேற்றும் பணிகளில் தீவிமாகஈடுபட்டனர். தெருக்கள், சாலைகளில் தேங்கிய மழைநீரை குழாய்கள் மூலம் வடிகாலுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.

டேங்கர் லாரிகள் மூலமும் மழைநீரை உறிஞ்சி எடுத்து அகற்றினர். மேயர் ஜெகன் பெரியசாமி காலையிலேயே மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, மழைநீரை வெளி யேற்றும் பணிகளை துரிதப்படுத்தினார். குறுகலான தெருக்களில் மோட்டார் சைக்கிளில் பயணித்து பணிகளை அவர் துரிதப்படுத்தினர். இதேபோல் தமிழக சமூக நலன் மற்றும்மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தூத்துக்குடி கதிர்வேல்நகர், தபால் தந்தி காலனி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு, தண்ணீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்): தூத்துக்குடி 27, வைகுண்டம் 64.10, திருச்செந்தூர் 60, காயல்பட்டினம் 22, குலசேகரன்பட்டின 49, சாத்தான்குளம் 25.80, கோவில்பட்டி 55, கழுகுமலை 40, கயத்தாறு 33, கடம்பூர் 38, எட்டயபுரம் 56.20, விளாத்திகுளம் 41, காடல்குடி 22, வைப்பார் 34, ஓட்டப்பிடாரம் 80, மணியாச்சி 63, வேடநத்தம் 7, கீழ அரசடி 4 .

கோவில்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில் ஆட்சியர் ஆய்வு: கோவில்பட்டியில் உள்ள இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப் பாதையில் அரை மணி நேரம் மழைபெய்தாலே, தண்ணீர் தேங்குவது வழக்கமாகி விட்டது. நேற்று முன்தினம் மாலை 3.45 மணி முதல் 5.15 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால், இந்த சுரங்கப்பாதையில் சுமார் 5 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியது. இரவு முழுவதும் சுரங்கப்பாதை வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி நேற்று காலை இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு துரித நடவடிக்கை எடுக்கஅதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், பாண்டவர்மங்கலம் ஊராட்சி அன்னை தெரசா நகர் பகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x