Published : 10 Nov 2023 05:44 AM
Last Updated : 10 Nov 2023 05:44 AM
நாமக்கல்/சேலம்/ஈரோடு: கனரக வாகனங்களுக்கான வரி, கட்டண உயர்வுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தனராஜ் தெரிவித்தார்.
தமிழக அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, லாரி, பேருந்து, கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களை புதிதாக பதிவு செய்வதற்கான கட்டணம், பர்மிட் பெறுவதற்கான கட்டணம், ஆயுட்கால வரி, லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான காலாண்டு வரி உள்ளிட்ட அனைத்து வரி, கட்டணங்களையும் உயர்த்தி அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, வரி உயர்வைக் கைவிட வலியுறுத்தின.
இந்நிலையில், காலாண்டு வரிமற்றும் கட்டண உயர்வைக் கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம்முழுவதும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்என்று நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடந்த மாதம் அறிவித்தது.
இந்தப் போராட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், வாடகைலாரி உரிமையாளர்கள் சங்கம்உள்ளிட்ட சங்கத்தினர் ஆதரவளித்தனர்.
இதன்படி, நேற்று காலை 6 மணிக்குத் தொடங்கிய லாரிகள் வேலைநிறுத்தம், மாலை 6 வரைநடைபெற்றது. இந்தப் போராட்டம்குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர்தனராஜ் சேலத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் லாரிகளை இயக்காமல், ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியுள்ளோம்.
தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன. சரக்குகளைக் கொண்டுவந்த லாரிகள், மினி சரக்கு லாரிகள் ஆகியவை ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதேபோல, வட மாநிலங்களில் இருந்து சரக்குகளைக் கொண்டு வந்த லாரிகள், கேரளா, புதுச்சேரிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்த லாரிகள் உள்ளிட்டவை மாநில எல்லைகளில் நிறுத்திவைக்கப்பட்டன. எங்களது கோரிக்கைகள் தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வரவில்லை. இனியாவது தமிழக அரசு எங்களைஅழைத்து பேச்சுவார்த்தை நடத்தி,கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகாண வேண்டும். காலாண்டு வரி உயர்வு ரத்து செய்யப்படாவிட்டால், அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.50 கோடி சரக்குகள் தேக்கம்: ஈரோடு மாவட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் நேற்றுஇயங்கவில்லை. இதனால், ஈரோட்டில் இருந்து கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் மஞ்சள், ஜவுளி, சமையல் எண்ணெய், தேங்காய், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட ரூ.50 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்தன.
தருமபுரியில் ரூ.15 கோடி பாதிப்பு: தருமபுரி மாவட்டத்தில் நேற்று 3,500 லாரிகள் இயங்கவில்லை. வேலைநிறுத்தம் காரணமாக மொத்தம் ரூ.15 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், மாநில லாரி உரிமையாளர்கள் சங்க துணைத் தலைவருமான மாது தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT