Published : 23 Jan 2018 09:27 PM
Last Updated : 23 Jan 2018 09:27 PM

ரத்தக்காயத்துடன் சுற்றித்திரிந்த செயின் பறிப்பு திருடர்கள்: சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸார்

போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் போக்கு காட்டி தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த செயின் பறிப்பு திருடர்கள் ரத்தக்காயத்துடன் சுற்றும் போது சந்தேகத்தின் பேரில் பல கிலோ மீட்டர் தூரம் விரட்டி போலீஸார் பிடித்தனர்.

அண்ணா நகர், மதுரவாயல், ஜே.ஜே.நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி பொதுமக்களிடம் செயின் பறிப்பு நடந்தது. இந்த தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் ஒரே ஆட்கள் என பாதிக்கப்பட்டவர்கள் புகாரிலிருந்து போலீஸார் கண்டுபிடித்தனர்.

ஆனாலும் அவர்கள் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். திருட்டு பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்து இருவரும் செயின் பறிப்பில் ஈடுபடுவர். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

டிவிஎஸ் கம்பெனி புதிதாக அறிமுகப்படுத்திய டாமினோர் என்ற இருசக்கர வாகனத்தில் இருவரும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்நிலையில் அதே நபர்கள் இன்று அண்ணா நகரில் ஒருவரிடம் செயினை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்களை பொதுமக்கள் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடியதில் மோட்டார் சைக்கிலிலிருந்து கீழே விழுந்து உடல் முழுதும் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கிழிந்த சட்டை சிராய்ப்புகள், ரத்தம் வழிந்தோட திருதிருவென விழித்துக்கொண்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் அண்ணா நகர் வழியாக வந்த போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இவர்களைப்பார்த்து சந்தேகப்பட்டு நிறுத்தச் சொன்னபோது இருவரும் வேகமாக தப்பிச்சென்றனர்.

போலீசாரும் இருவரையும் விடாது விரட்டிச் சென்றனர். அண்ணாநகரிலிருந்து ரெட்டேரி வரை விடாமல் மோட்டார் சைக்கிலும் போலீஸ் வாகனமும் சினிமா பாணியில் விரட்டிச்செல்ல ஒருகட்டத்தில் ரெட்டேரி அருகே மோட்டார் பைக் நிலைத்தடுமாற மறுபடியும் கீழே விழுந்ததில் இருவரும் போலீஸாரிடம் சிக்கினர்.

அவர்களை சுற்றி வளைத்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 சவரனுக்கும் அதிகமான செயின் பறிப்பில் அபகரித்த நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இருவரும் சிக்கியதால் ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இருவரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் பெயர் தஸ்தகிர்(எ) தனுஷ், சிவா இருவரும் ஆவடியை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை திருடி அதன் மூலம் 15 இடங்களில் இதுவரை செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை எங்குமே சிக்கியதில்லை எனத் தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x