

சென்னை: சென்னை உள்ளிட்ட இதர மாவட்டங்களில் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை கிலோ ரூ.52-க்கும், சில்லறை விலை ரூ.58-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பெரிய வெங்காயத்தை அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுத் துறைமூலம் கிலோ ரூ.30 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஹர்சகாய் மீனா தலைமையில்,கடந்த நவ.8-ம் தேதி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் கோயம்பேடு வெங்காய மொத்த வணிகர்கள் சங்கத்தைசேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது, வெங்காய விலை ஏற்றத்துக்கான நீண்டகால தாக்கம் குறித்த காரணங்கள், விலையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாநிலத்தில் வெங்காய விலையை ஒரே சீரான நிலையில் வைக்கஅரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாக மொத்த வணிகர்கள் உறுதியளித்துள்ளனர். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.