

சென்னை: தடையற்ற வகையில் கட்டுமானப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எம்.அய்யப்பன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மாநில மற்றும் மத்திய அரசுத் துறையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களின்கீழ் பல்வேறுகட்டுமான பணிகளை செய்து வருகிறோம்.
அதற்கான மூலப் பொருட்களான மணல், ஜல்லி, எம்சாண்ட் போன்றவற்றின் உற்பத்தி பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு, பணிகள் தேக்கமடைந்துள்ளன. அரசு மற்றும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். இதற்கிடையே காரணமே இல்லாமல் சிமென்ட் விலையையும் உற்பத்தி நிறுவனங்கள் ரூ.120 வரை அதிகரித்துள்ளன.
பொதுப் பணித்துறையின் மணல் குவாரிகள் இயங்காததால் ஆற்று மணல் கிடைக்கவில்லை. இதனால் எம்சாண்ட் விலை இருமடங்கு உயர்ந்துவிட்டது. கனிமவளத்துறையின் கடுமையான கட்டுப்பாட்டால் கல்குவாரி உரிமையாளர்கள் கிரஷரில் ஜல்லி உடைக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டிதொகையை ஒப்பந்ததாரர்களுக்கு தமிழக அரசு வழங்கவில்லை.
ஒற்றை சாளர முறையில் கட்டிடஅனுமதி வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட மென்பொருளை மேம்படுத்த வேண்டும். மேலும், வரைபட அனுமதி கட்டணம் மற்றும் வளர்ச்சிக் கட்டணத்தை குறைக்க வேண்டும். குறிப்பாக கட்டுமான பொருட்கள், தடையின்றி அரசு விலையின்படி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது திட்டப் பணிகளுக்கான மூலப் பொருட்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கான திறன் இருக்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்வில், சங்கத்தின் அகில இந்திய பொருளாளர் மோகன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் சிவக்குமார், முத்துகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.