தமிழக அரசிடம் பெற்ற ரூ.25 லட்சம் பரிசுத் தொகையை கல்வி நிறுவனங்களுக்கு பிரித்து வழங்க விஞ்ஞானி வீரமுத்துவேல் விருப்பம்

தமிழக அரசிடம் பெற்ற ரூ.25 லட்சம் பரிசுத் தொகையை கல்வி நிறுவனங்களுக்கு பிரித்து வழங்க விஞ்ஞானி வீரமுத்துவேல் விருப்பம்
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசு அறிவித்த ரூ.25 லட்சம் பரிசுத் தொகையை தமிழகத்தில் தான் பயின்ற கல்வி நிறுவனங்களுக்கு பிரித்து வழங்க சந்திரயான் -3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல், விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளித் துறை செயலர் சந்தியா வேணுகோபால் சர்மா, தமிழக உயர்கல்வித் துறைசெயலர் ஏ.கார்த்திக்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் கல்விபயின்று, இந்திய விண்வெளித் துறையின்கீழ் இயங்கும் இஸ்ரோவில் சிறப்பான பங்களிப்பை செய்தவர்களை தமிழக அரசு கடந்த அக்.2-ம் தேதி கவுரவித்து சிறப்பித்தது. அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ரூ.25 லட்சம் ரொக்க பரிசை முதல்வர் அறிவித்தார்.

பரிசு பெற்றவர்களில் ஒருவரானசந்திரயான்-3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல், அத்தொகையை, தமிழகத்தில் தான் பயின்ற 4 கல்வி நிறுவனங்களுக்கு சமமாக பிரித்து வழங்க முன்வந்துள்ளார். அதன்படி, விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்ஐடி, சென்னை ஐஐடி ஆகியவற்றுக்கு நிதி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரோ முன்னாள் தலைவர்கே.சிவன், திட்ட இயக்குநர்கள் மயில்சாமி அண்ணாதுரை (சந்திரயான்-1), மு.வனிதா (சந்திரயான்-2), ப.வீரமுத்துவேல் (சந்திரயான்-3), நிகார் ஷாஜி (ஆதித்யா-எல்1), திருவனந்தபுரம் திரவ உந்து அமைப்பு மைய இயக்குநர் வி.நாராயணன், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வு மைய இயக்குநர் ஏ.ராஜராஜன், பெங்களூரு யு.ஆர்.ராவ் செயற்கைக் கோள் மைய இயக்குநர் எம்.சங்கரன், மகேந்திரகிரி உந்துவிசை வளாக இயக்குநர் ஜெ.ஆசிர் பாக்கியராஜ் ஆகியோருக்கு பரிசுத் தொகையை முதல்வர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in