

வத்திராயிருப்பு: தொடர் மழையால் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 42 அடியை நெருங்கியது. இதனால் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பிளவக்கல் பெரியாறு அணை அமைந்துள்ளது. 47.5 அடி உயரமுள்ள இந்த அணையின் மூலம் 40 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் பெரியாறு பிரதான கால்வாய் மூலம் 960 ஏக்கர் நிலங்கள் உட்பட 8,531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறு கின்றன.
இந்த ஆண்டு கோடை மழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் 20 அடிக்கும் கீழ் குறைந்தது. கடந்த மாதம் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 30 அடியைத் தாண்டியது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு விநாடிக்கு 170 கன அடிக்கு மேல் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் 42 அடியை நெருங்கியது.
அதேபோல் பிளவக்கல் கோவிலாறு அணைக்கு விநாடிக்கு 114 கன அடி நீர்வரத்து உள்ளதால், 42 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 21 அடியைத் தாண்டி உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் முதல் போக சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத் திலேயே பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 40 அடியைத் தாண்டியதால் நவம்பர் 5-ம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கோடை மழை ஏமாற்றியதால் இரண்டாம் போக சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது அணை நீர்மட்டம் 40 அடியை தாண்டிய நிலையில் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றனர்.