

ஈரோடு: பவானி சாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்தது.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் மூலம் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றன. பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப் படுகின்றன. பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், பவானி சாகர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அணைக்கு நேற்று முன் தினம் மாலை விநாடிக்கு 3,056 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 4 மணிக்கு 33 ஆயிரத்து 329 கன அடியாக அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 72.41 அடியாகவும், நீர் இருப்பு 12 டி.எம்.சி-யாகவும் இருந்தது. மாலையில் விநாடிக்கு 13 ஆயிரத்து 643 கன அடியாக நீர்வரத்து சரிந்தது.