அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 6-வது நாளாக வருமான வரி சோதனை

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 6-வது நாளாக வருமான வரி சோதனை
Updated on
1 min read

திருச்சி/ சென்னை/ கோவை: தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் தொடர்புடைய இடங்களில் 6-வது நாளாக நேற்றும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவுடன் தொடர்புடைய இடங்களில் கடந்த 3-ம் தேதி முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி தென்னூர் கண்ணதாசன் தெருவில் உள்ள மணப்பாறை தொழிலதிபர் சாமிநாதனின்(57) வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று அதிகாலை வரை சோதனை மேற்கொண்டனர். சாமிநாதன் மற்றும் அவரது மனைவியை அழைத்துச் சென்று, அவர்களது வங்கி லாக்கர்களிலும் சோதனை நடத்தினர்.

இதில், கணக்கில் வராத 4.5 கிலோ தங்கம், ரூ.2 கோடி ரொக்கம் மற்றும் பல கோடி மதிப்பிலான ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், சென்னை வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சாமிநாதனுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் தி.நகரில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனஅலுவலகம், காசா கிராண்ட் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 6-வது நாளாக சோதனை நடந்தது. இதேபோல,பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள், ஃபைனான்சியர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. 6 நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்று நிறைவடைந்ததாகவும், இதில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல்தரவுகள், பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை முழுமையாக முடிந்தபின்னரே முழு விவரங்களும் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோவையில் கடந்த 3-ம் தேதி முதல் திமுக பெண் பிரமுகர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். 6-வது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது. குறிப்பாக, நஞ்சுண்டாபுரத்தில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயக்குமாரின் வீட்டில் நேற்றும் சோதனை நடத்தப்பட்டது.

இவரது மனைவி மீனா ஜெயக்குமார் திமுக கலை, இலக்கியம், பகுத்தறிவு பிரிவு மாநில துணைச் செயலராக உள்ளார். இவர்களது மகன் ராமுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும் நேற்று சோதனை நடந்தது. கோவையில் நடைபெற்ற சோதனை நேற்று இரவுடன் நிறைவடைந்ததாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in