Published : 09 Nov 2023 05:24 AM
Last Updated : 09 Nov 2023 05:24 AM

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை | ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14,000 கனஅடியாக உயர்வு; மேட்டூர் அணை நீர்மட்டம் 55 அடியாக அதிகரிப்பு

மேட்டூர்/தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

தமிழகம், கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

250 கனஅடி வெளியேற்றம்: மேட்டூர் அணைக்கு கடந்த 5-ம் தேதி விநாடிக்கு 1,845 கனஅடியாக இருந்த நீர்வரத்து 7-ம் தேதி 2,702 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், தொடர் மழையால் நேற்று காலை விநாடிக்கு 6,498 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 4 மணிக்கு 7,563 கனஅடியாக அதிகரித்தது.

குடிநீர் தேவைக்காக மட்டும் அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலைமுதல் 250 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணை நீர்மட்டம் தற்போது 54.85 அடியாகவும், நீர்இருப்பு 21 டிஎம்சியாகவும் உள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 6-ம் தேதி காலை விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் காலைவிநாடிக்கு 5,000 கனஅடியாகவும், மாலை 6,000 கனஅடியாகவும் அதிகரித்தது. இந்நிலையில், நேற்று காலை விநாடிக்கு 8,000கனஅடியாகவும், மாலை 6 மணியளவில் 14,000 கனஅடியாகவும் உயர்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x