Published : 09 Nov 2023 04:00 AM
Last Updated : 09 Nov 2023 04:00 AM

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கிய நிலம் விவகாரம்: ஓசூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயற்சி

ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கிய நில விவகாரத்தில் நிலம் அளவீடு பணியின் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்காக, ஓசூர் அருகே சானமாவு கிராமத்தில் கெம்பையா என்பவருக்குச் சொந்தமான 2.38 ஏக்கர் நிலத்தை அரசு விலைக்கு வாங்கியது. கடந்த 1998-ம் ஆண்டு அந்த நிலம் பட்டியலின மக்கள் 41 பேருக்கு இலவசமாக ஒதுக்கீடு செய்து வீட்டுமனையாக வழங்கப்பட்டன.

இந்நிலையில், நிலத்தை விற்ற கெம்பையாவின் வாரிசுகள் அந்த நிலத்தை தங்களிடம் அரசு திரும்ப வழங்கக் கோரி கடந்த 1999-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அரசு ஒதுக்கிய நிலத்தைப் பட்டியலின மக்களுக்கு அளவீடு செய்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், பட்டியலின மக்களுக்கு நிலத்தை அளவீடு செய்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், கடந்த அக்.16-ம் தேதி பட்டியலின மக்கள் தங்களுக்கு ஒதுக்கிய நிலத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெம்பையாவின் வாரிசுகள் மற்றும் உறவினர்கள் அந்த நிலத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இருதரப்பினரிடமும் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி, நவம்பர் 10-ம் தேதிக்குள் நிலத்தைப் பட்டியலின மக்களுக்கு அளவீடு செய்து வழங்கப்படும் என வருவாய்த் துறையினர் உறுதியளித்தனர்.

அதன்படி நேற்று (8-ம் தேதி) அந்த நிலத்தில் ஆதி திராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் ரமேஷ், ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் குண சிவா, சூளகிரி வட்டாட்சியர் சத்திவேல், வருவாய் ஆய்வாளர் ஜெயகுமார் ஆகியோர் நில அளவீடு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி, டிஎஸ்பி முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த கெம்பையாவின் பேத்தி மாதேவம்மா (38), பேரன்கள் முருகேசன் (30), மஞ்சு (32) ஆகியோர் மீண்டும் நிலத்தை தங்களுக்கு வழங்கக் கோரி, எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தாங்கள் கொண்டு வந்திருந்த விஷத்தைக் குடித்தனர். அதிர்ச்சி அடைந்த போலீஸார், உடனடியாக 3 பேரையும் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மாதேவம்மா, மஞ்சு ஆகியோர் மேல் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, கெம்பையாவின் வாரிசுகள் விஷம் குடித்த தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் நில அளவீடு செய்யும் இடத்தில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீஸார் அமைதிப்படுத்தி, அங்கிருந்து அகற்றினர். பின்னர் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x