

சென்னை: பிஹார் சட்டப்பேரவையில், மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார் பேசும்போது பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், பெண்கள்அமைப்பினர் நிதிஷ்குமார் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நிதிஷ்குமாரை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் பிரமிளா சம்பத் தலைமை தாங்கினார். மகளிர் அணிமாநில பொதுச் செயலாளர் நதியா சீனிவாசன், மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் சரளா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பிரமிளா சம்பத் கூறியதாவது: அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். இவற்றைப் பற்றியெல்லாம் பேசாமல், சட்டப்பேரவையில் பெண்களைப் பற்றி பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் இழிவாக பேசியுள்ளார்.
தற்போது, தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டால் சரியாகி விடுமா? எனவே, பிஹார் முதல்வர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். பிரதமர் மோடி இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, நிதிஷ்குமார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.