வெ.விரகாலூர் கிராமத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நேற்று நிதியுதவி அளித்த எம்.பி திருமாவளவன்.
வெ.விரகாலூர் கிராமத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நேற்று நிதியுதவி அளித்த எம்.பி திருமாவளவன்.

“தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வராது என்ற தைரியத்தில் பேசுகிறார் அண்ணாமலை” - திருமாவளவன்

Published on

அரியலூர்: தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வராது என்ற தைரியத்தில் அண்ணாமலை வாக்குறுதிகளை அளித்து வருகிறார் என எம்.பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் வெ.விரகாலூர் கிராமத்தில் அக்.9-ம் தேதி நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

இந்த வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த வெ.விரகாலூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்.பியுமான திருமாவளவன் நேற்று சந்தித்து, ஆறுதல் கூறி, 6 குடும்பத்தினருக்கு தலா ரூ.10,000 வீதம் நிதியுதவி வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வெடி விபத்தை தவிர்க்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் வருகிறது. ஆனாலும், சில இடங்களில் இதுபோன்ற விபத்துகள் நிகழ்வது வேதனை அளிக்கிறது. அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறை நீக்கப்படும்,

ஸ்ரீரங்கம் கோயில் முன்புள்ள பெரியார் சிலை அகற்றப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்பதை தெரிந்து, ஆட்சிக்கு வராது என்ற தைரியத்தில் அண்ணாமலை பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டத்தை விசிக ஆதரிக்கிறது. அதுமட்டுமன்றி, உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதுதொடர்பாக மக்களவையிலும் பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ஜெயங்கொண்டம் அருகே நல்லூர் கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா முன்னிலையில் எம்.பி திருமாவளவன் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in