குமரியில் மழை நீடிப்பு - 2,000 குளங்கள் நிரம்பின
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று மதியத்துக்கு பின்னர் கனமழை பெய்தது. சிற்றாறு ஒன்று அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் கோதையாறு, வள்ளியாறு, பரளியாற்றில் வெள்ளம் கரைபுரள்கிறது. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் நேற்று 43.60 அடியாக இருந்தது.
அணைக்கு 465 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.17 அடியாக இருந்தது. அணைக்கு 512 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 18.71 அடியாக உள்ளது. அணையில் இருந்து 234 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக் குமார் (47). இவருக்கு சொந்தமான விசைப் படகில் அதே பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டனர். மழைக்கு மத்தியில் கூடங்குளம் பகுதியில் மீன் பிடிக்க சென்ற சிறிது நேரத்தில் படகில் பழுது ஏற்பட்டது.
பழுதான விசைப்படகு நடுக்கடலில் தத்தளித்த நிலையில், கடலில் ஏற்பட்ட நீரோட்டத்தின் காரணமாக சங்குத் துறை கடற்கரையில் கரை ஒதுங்கியது. படகில் இருந்த மீனவர்கள் பத்திரமாக கரை சேர்ந்தனர்.
