Last Updated : 30 Jan, 2018 08:04 AM

 

Published : 30 Jan 2018 08:04 AM
Last Updated : 30 Jan 2018 08:04 AM

காந்தத்தால் சிலிண்டரை இழுத்து உயிரை குடித்த பயங்கரம்: எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை ஆபத்தானதா?

நோ

யைக் கணிக்க மருத்துவர்களுக்கு உதவும் ஸ்கேன் பரிசோதனைகளில் மிகத் தெளிவானது, துல்லியமானது எனப் போற்றப்படுவது எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை. இதில் எக்ஸ் கதிர்கள் பயன்படுத்துவது இல்லை. எனவே, கதிர்வீச்சு ஆபத்து துளியும் இல்லை. இந்த நன்மைக்காகவும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை மிகவும் பிரபலமாகியுள்ளது. புற்றுநோய் போன்ற ஆபத்தான காரணங்களுக்கு மட்டுமல்லாமல், காய்ச்சல் போன்ற சாதாரண காரணங்களுக்கும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்வது இந்த காலத்தில் இயல்பாகிவிட்டது. இந்த சூழலில், எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தில் நோயாளி ஒருவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மும்பையில் தற்போது நடந்திருக்கிறது.

காந்தக் கதிர்களை உடலுக்குள் செலுத்தி, உடலில் ஒரு காந்தப்புலத்தை உருவாக்கி, ரேடியோ அதிர்வலைகளைப் பயன்படுத்தி, கணினி உதவியுடன் உறுப்புகளைப் படம்பிடித்துக் காண்பிப்பதுதான் Magnetic Resonance Imaging எனப்படும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை.

சிறிய குகை போல இருக்கும் இக்கருவியில், வட்ட வடிவில், காந்தக் கதிர்களை வெளிவிடுகிற குழாய் இருக்கிறது. இது அறையின் வெளிப்பக்கத்தில் இருக்கிற கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். முதலில், எந்த உறுப்புக்கு ஸ்கேன் செய்யவேண்டும் என தீர்மானித்து, அப்பகுதிக்கு எவ்வளவு காந்தக் கதிர்கள் தேவை எனக் கணக்கிட்டு, காந்தக் குழாயில் இருந்து அனுப்புவார்கள்.

உடல் செல்கள் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மூலக்கூறுகளால் ஆனவை. ஹைட்ரஜன் அணுக்களின் மத்தியப் பகுதியில் புரோட்டான் எனும் அணுக்கள் உள்ளன. இவற்றின் அருகே ஒரு காந்தப் பொருளைக் கொண்டுவந்தால், இவையும் காந்தத் தன்மையைப் பெற்று, காந்தத்தை நோக்கி நகரும் தன்மையைப் பெறுகின்றன. இந்த நேரத்தில் ஸ்கேனரில் இருந்து ரேடியோ அதிர்வலைகளை அந்த உறுப்புக்குள் அனுப்புகிறார்கள். இதன் விளைவால், புரோட்டான்கள் தகர்க்கப்பட்டு, தங்கள் வரிசையில் இருந்து சிதறுகின்றன. இப்போது காந்தக் கதிர்களும், ரேடியோ அலைகளும் நிறுத்தப்படும். இதனால் புரோட்டான்கள் காந்தத் தன்மையை இழந்து, உறுப்பில் அவை இருந்த பழைய நிலைக்கே திரும்பிச் செல்கின்றன. இப்படித் திரும்பிச் செல்லும்போது, புரோட்டான்கள் தங்களைத் தகர்த்த ரேடியோ அலைகளை வெளியில் அனுப்பும். இவற்றை ஸ்கேனரில் காந்தக் குழாய்க்கு எதிர்ப்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் உணர்கருவி சேகரித்து கணினிக்கு அனுப்பும்.

அது உணர்கருவி அனுப்பிய ரேடியோ அலைகளை ஒருங்கிணைத்து, முப்பரிமாணப் படங்களாகத் தயாரித்து திரையில் காண்பிக்கும். இந்த அலைகள் உறுப்பின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் வருவதால், அந்த உறுப்பின் உள்பகுதி, வெளிப்பகுதி, குறுக்குப் பகுதி, நெட்டுப் பகுதி என எல்லாப் பகுதிகளையும் தெளிவாகக் காணமுடியும்.

மேலும், திரும்பிச் செல்லும் புரோட்டான்கள் ஒரே வேத்தில் திரும்புவதில்லை. அந்தத் திசுவின் தன்மையைப் பொறுத்து வேகம் மாறுபடும். இதைக் கொண்டும் திசுவின் தன்மையை அறியமுடியும். இதனாலேயே, உறுப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பாதிப்புகள், குறைபாடுகள், நோய்கள் எனப் பலவற்றையும் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் நுணுக்கமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஸ்கேனுக்குச் செல்லும் முன்பு மோதிரம், வளையல், செயின், வாட்ச், ஊக்கு, பொத்தான், கண்ணாடி, செயற்கை பல்செட், இடுப்பு பெல்ட் போன்ற உலோகப் பொருட்களைக் கழற்றிவிட வேண்டும். காசு, சாவி, ஏடிஎம் கார்டு போன்றவற்றையும் அகற்றிவிட வேண்டும். பரிசோதனை அறைக்குள் இவை அனுமதிக்கப்படாது.

உடலில் உலோகப் பொருட்கள் பதிக்கப் பெற்றவர்கள் அந்த விவரத்தை பரிசோதனைக்கு முன்பு கட்டாயம் சொல்லிவிட வேண்டும்.

மும்பையில் நடந்தது என்ன?

மும்பையில் உள்ள பிஒய்எல் நாயர் மருத்துவமனையில் வயதான ஒரு நோயாளிக்கு 2 நாட்களுக்கு முன்பு எம்ஆர்ஐ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

அப்போது, நோயாளிக்கு செயற்கை சுவாசம் பொருத்துவதற்காக ஆக்ஸிஜன் சிலிண்டரை எம்ஆர்ஐ இயந்திரம் உள்ள அறைக்குள் எடுத்துவருமாறு நோயாளியின் உறவினரிடம் மருத்துவமனை ஊழியர் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த நபர் சிலிண்டரை எடுத்துக்கொண்டு, அறைக்குள் நுழைந்துள்ளார். இரும்பு உலோகத்தாலான சிலிண்டரை அந்த இயந்திரம் பலத்த வேகத்தில் இழுத்தபோது அந்த நபரையும் சேர்த்து இழுத்துள்ளது. இதில், இயந்திரத்தில் சிக்கி, அடிபட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முதலில், எம்ஆர்ஐ இயந்திரம் இயங்கும் நிலையில் இருக்கும்போது, எந்த நபரும் அந்த அறைக்குள் நுழையக்கூடாது. இரண்டாவது, சிறிதோ, பெரிதோ.. இரும்பாலான உலோகப் பொருட்களை அந்த அறைக்குள் கொண்டுசெல்லவே கூடாது.

மூன்றாவது, நோயாளியுடன் மருத்துவமனை உதவியாளர்கள் மட்டுமே அந்த அறைக்குள் செல்ல அனுமதி உண்டு. அதிலும், பரிசோதனைக்கு நோயாளியை தயார்படுத்திவிட்டு, மருத்துவ உதவியாளரும் வெளியே வந்துவிட வேண்டும். வெளியில் இருக்கும் கண்ணாடி வழியாக மட்டுமே நோயாளியைக் கண்காணிப்பது வழக்கம்.

மேலும், ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்வதும் மருத்துவமனை ஊழியரின் பணிதானே தவிர, உறவினரின் பணி அல்ல. இந்த விதிமுறைகள் எல்லாம் மீறப்பட்டதாலேயே, மும்பை மருத்துவமனையில் இந்தப் பரிதாபம் நடந்துள்ளது. ஆக, ஆபத்துக்கு காரணம் கருவி அல்ல; அதை சரிவர இயக்காததும், விதிமுறைகளை மீறுவதுமே ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.

காந்தம் என்பது இரும்பாலான சிறு பொருளையும் கவர்ந்திழுக்கும் தன்மை உடையது. அதிலும், எம்ஆர்ஐ கருவியில் உள்ள காந்தம் மிக அதிகத் திறன் கொண்டது. அப்படியிருக்க, இரும்பாலான ஆக்ஸிஜன் சிலிண்டரை எப்படி அந்த அறைக்குள் கொண்டுசெல்ல அனுமதித்தார்கள் என்பது வியப்பாக உள்ளது.

எம்ஆர்ஐ பரிசோதனைக்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய முன்தயாரிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட நோயாளியிடமும், அவரை கவனித்துக்கொள்ள வந்தவரிடமும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டியது மருத்துவமனை ஊழியர்களின் பணி. ஆனால் அவர்களே விதி மீறி நடந்துள்ளனர் என்பதுதான் துயரம்

இது மருத்துவமனை ஊழியர்களின் அறியாமையின் வெளிப்பாடா? அல்லது மனித உயிர்களின் மீதுள்ள அலட்சியப்போக்கின் வெளிப்பாடா? எதுவானாலும் அவர்கள் கடுமையான தண்டனைக்கு உரியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

கட்டுரையாளர்: பொது மருத்துவர், மருத்துவ எழுத்தாளர்

உள்ளே அனுமதி இல்லை

டலில் காந்தப்புலத்தை ஏற்படுத்தி எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால், இரும்பு கலந்த உலோகங்கள் காந்தப் புலத்தை நோக்கி இழுக்கப்படும். இது அவர்களுக்கு ஆபத்தாக அமையும். எனவே, கீழ்க்கண்டவர்களை எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்த முடியாது.

ஃபேஸ்மேக்கர், ஐசிடி எனும் டிஃபிபிரிலேட்டர், காக்லியர் இம்பிளான்ட், நரம்புத்தூண்டல் கருவி போன்றவற்றை உடலில் பதிக்கப்பெற்றவர்கள்.

பலத்த எலும்பு முறிவு மற்றும் முதுகுத் தண்டுவடப் பிரச்சினைக்கான சிகிச்சையின்போது பிளேட், ஸ்குரூ, வயர் போன்ற உலோகப் பொருட்கள் பொருத்தப்பட்டவர்கள்.

உலோகத்தாலான செயற்கை இதயவால்வு பொருத்திக்கொண்டவர்கள்.

பெருந்தமனி வீக்கத்துக்கு (Aneurism of Aorta) ‘கிளிப்’ பொருத்திக்கொண்டவர்கள்.

தங்கப்பல் பதிக்கப்பெற்றவர்கள்.

முழங்காலில் செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை மற்றும் இடுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள்.

‘காப்பர்-டி’ என்னும் கர்ப்பத் தடைக் கருவி பொருத்திக்கொண்டவர்கள்.

இவர்கள் மட்டுமின்றி, வேறு ஏதேனும் சிகிச்சைக்காக உலோகத்தாலான பொருட்களை உடலில் பதித்துக்கொண்டவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்துகொள்ள முடியாது. அதற்கு பதிலாக, எக்ஸ்ரே அல்லது சி.டி.ஸ்கேன் பரிசோதனையை அவர்கள் மேற்கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x