Published : 08 Nov 2023 09:28 PM
Last Updated : 08 Nov 2023 09:28 PM

‘இது பாஜகவின் சூளுரை’... ‘தமிழகத்தில் நடக்காது’... - அண்ணாமலை Vs சேகர்பாபு

திருச்சி / சென்னை: “தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாளில் இந்து சமய அறநிலையத் துறை என்பது அமைச்சரவையில் இருக்காது. இது பாஜகவின் சூளுரை.” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். இதற்கு பதிலடி தந்துள்ள அமைச்சர் சேகர்பாபு, “கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் வந்தாலும் வருமே தவிர, பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் என்பது தமிழகத்தில் கிடைக்காது. அண்ணாமலை போன்றோர் அதிகாரத்தில் கையெழுத்திடுகின்ற வாய்ப்பை தமிழக மக்கள் எந்நாளும் வழங்கமாட்டார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பேசியது என்ன? - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக திருச்சி திருவானைக்காவலில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் நிறைவு செய்தார். அங்கு அண்ணாமலை பேசுகையில், “எனது யாத்திரை நூறாவது நாளாக நூறாவது தொகுதியாக 108 திவ்யதேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சைவமும், வைணவமும் ஒற்றுமையாக இருந்து சனாதன தர்மத்தை காக்கின்றன. ஆனால், திராவிட இயக்க தலைவர்கள் சனாதனத்தை ஒழித்துவிடுவோம் என பேசுகின்றனர். திமுகவை எதிர்க்க நாம் ஒன்றுசேர வேண்டும். திமுக நடத்துவது அனைத்து மக்களுக்கும் எதிரான ஆட்சி.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாள், முதல்நொடியில் கடவுளை நம்புபவன் முட்டாள் என்றவரின் சிலை, கொடிக்கம்பம் இங்கிருந்து (ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே) அப்புறப்படுத்தப்படும். அங்கு ஆழ்வார்கள், நாயன்மார்கள், தமிழ் புலவர்கள், சுதந்திர வீரர்கள் சிலை வைக்கப்படும். அதேபோல இந்து சமய அறநிலையத் துறை என்பது அமைச்சரவையில் இருக்காது. ஜம்புத்தீவு பிரகடனம் போல, ‘என் மண், என் மக்கள்’ பிரகடனமாக இதை எடுத்துக்கொள்ளுங்கள். இது பாஜகவின் சூளுரை. 2026-ம் ஆண்டு பாஜகவை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்த வேண்டும். பாஜகவின் தேவை தமிழகத்துக்கு அதிகம் தேவை.

ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, தொகுதிக்கு வருவதில்லை. கரூரில் குவாரி நடத்திக்கொண்டிருக்கிறார். விதிகளை மீறி செயல்பட்ட பழனியாண்டி குவாரிக்கு ரூ.23.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது, ‘தன்னை விட யாரும் பணக்காரனாக இருக்கக்கூடாது என அமைச்சர் கே.என்.நேரு என்னை அழிக்கப் பார்க்கிறார்’ என பழனியாண்டி பேசிய ஆடியோ வெளியானது.

இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் முதலில் அண்ணாமலை கைது செய்யப்படுவார் எனக் கூறும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு, தைரியமிருந்தால் இப்பொழுதே என்னை கைது செய்யட்டும். 2024-ல் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்துவிடும் என பகல் கனவு காண வேண்டாம். 1924-ம் ஆண்டு காவிரி பங்கீடுக்காக 50 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதை 1974-ம் ஆண்டு புதுப்பிக்காமல் நாடகமாடிய அப்போதைய முதல்வர் கருணாநிதி தான் காவிரி பிரச்சினைக்கு ஒரே காரணம். நாடக கம்பெனியான திமுகவுக்கு தலைவராக ஸ்டாலின் இருக்கிறார்” என்று அண்ணாமலை பேசினார்.

சேகர்பாபு பதிலடி: ஸ்ரீரங்கம் பெரியார் சிலை உள்ளிட்டவை பற்றி அண்ணாமலை பேசியதற்கு பதிலடியாக சென்னையில்இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியது: “ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒருசேர வாழும் நாடு இந்த நாடு. இதில் பெரியார் கொள்கைகளோடு, இந்து மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில்தான், இந்த அரசு நடந்து கொண்டு இருக்கிறது. கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் வந்தாலும் வருமே தவிர, பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் என்பது தமிழகத்தில் எத்தனை குட்டிக் கர்ணங்கள் அடித்தாலும், எத்தனை ஐ.டி ரெய்டுகள் நடத்தினாலும், எத்தனை அமலாக்கத் துறை ரெய்டுகள் நடத்தினாலும் கிடைக்காது. தமிழகத்தைப் பொறுத்தவரை இது திராவிட மண்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓர் இரும்பு மனிதர். தமிழகத்தில் இன்னொரு கால் நூற்றாண்டுக்கு, திமுக ஆட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைப்பது குறித்து நினைத்துப் பார்க்கும் அளவுக்கு ஒரு சூழ்நிலை நிலவவில்லை. தமிழக முதல்வரின் அரும்பணியும், மக்கள் நலத்திட்டங்களும், ஏற்கெனவே இருக்கும் திமுகவின் வாக்கு வங்கியில் மேலும் 20 சதவீதம் கூடியிருக்கிறது. எனவே, அண்ணாமலை போன்றவர்களுக்கு அதிகாரத்தில் கையெழுத்திடுகின்ற வாய்ப்பை தமிழக மக்கள் எந்நாளும் வழங்கமாட்டார்கள்.

இந்தியாவில், இந்து சமய அறநிலையத் துறை தமிழகத்தில் 1959-ல் உருவாக்கப்பட்ட பிறகு, எண்ணற்ற சாதனைகள் எந்த ஆட்சியிலும் செய்யப்படவில்லை. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி இந்தத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதால், பாஜக மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் மக்களை பிளவுபடுத்தி அதில் ஆதாயம் காணத் துடிக்கிறது. ஆனால், இந்துக்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியாக திமுக இருப்பதால், ஆன்மிகவாதிகளை ஏற்றுக்கொண்டு அரவணைக்கும் இயக்கமாக திமுக இருப்பதால், பாஜகவால் தமிழகத்தில் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதால்தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து என்றெல்லாம் அறைகூவல் விடுத்து வருகின்றனர்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x