

மதுரை: மதுரையில் இன்று தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறனை, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், தற்போதைய அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன், சிறு விபத்து காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மதுரை கலைநகரிலுள்ள வீட்டில் ஓய்வு பெற்றுவருகிறார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேவர் குருபூஜையையொட்டி மதுரைக்கு வருகைந்தபோது, அவரது இல்லத்துக்கு சென்று நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகி்னறனர். அதனைத் தொடர்ந்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், தற்போதைய அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது, பட்டிமன்ற நடுவர் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் ரா.விஜயராஜன், புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ஜீவானந்தம், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் கே.அலாவுதீன், பாரதி புத்தகாலயம் பொறுப்பாளர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.